“சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியை பிறர் போற்றும் வண்ணம் நாகரிகமாக நாம் பயன்படுத்த வேண்டும்” என தொண்டர்களை ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிமுகவின் ஒற்றைத் தலைமையால் ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், எடப்பாடி பழனிசாமி இன்னொரு அணியாகவும் பிரிந்து நிற்பதுடன், இரு தரப்பினரும் மாறிமாறி கடுமையாகச் சாடி வருகின்றனர். மூத்த நிர்வாகிகள் பலரும்கூட எதிர்தரப்பினரை ஒருமையில் பேசுவதும் நடந்து வருகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியே ஒருமுறை, “அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதை பலமுறை சொல்லியாச்சு. சூரியனை பார்த்து… அதுதான் (சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்குதான் பாதிப்பு என்கிற பழமொழி). அதிமுகவிற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை’’ என நாகரிமற்ற வார்த்தையைக் கூறியிருந்தார்.

நிர்வாகிகளின் நாகரிகமற்ற பேச்சு!
சசிகலாவை மட்டுமல்ல, ஓ.பன்னீர்செல்வத்தையும் ஜூலை 11 ஆம் தேதிக்குப் பின் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார் எடப்பாடி. அதுபோலவே, அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் ஓ.பன்னீர்செல்வத்தை நாகரிகமற்ற, தரக்குறைவான வார்த்தைகளால் அதிகம் தாக்கி வருகின்றனர். இதற்கு ஓ,பன்னீர்செல்வம் தரப்பிலும் அவரது ஆதரவாளர்களான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கோவை செல்வராஜ், புகழேந்தி போன்றோர் நாகரிமற்ற வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை தமக்குப் பிடிக்காத தலைவராக இருந்தாலும் தரமற்ற வார்த்தையை உபயோகிக்க மாட்டார். கோபம் வரும் நேரத்தில்கூட மிக நிதானமாக நாகரிமான வார்த்தைகளையே உபயோகிப்பார். அதை, இன்றுவரை நாம் அவரிடம் பார்க்கலாம். இப்படி, தன்னுடைய ஆதரவாளர்களும் நாகரிகமான வார்த்தைகளையே உபயோகிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தனது தொண்டர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 4) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அண்ணாவின் சம்பவம் உதாரணம்!
அதில், “நாகரிகம் என்பது எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் தூய்மையாக நடந்துகொள்வது ஆகும். ’உயர்ந்த நிலையில் இருந்தும் உயர்ந்த குணம் இல்லாதவர் சிறியர். கீழ்நிலையில் இருந்தாலும் இழிவான குணம் இல்லாதவர் பெரியோர்’ என்றார் வள்ளுவப் பெருந்தகை. பேரறிஞர் அண்ணா நண்பர்களோடு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது போகிற வழியில் ஒரு பொதுக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அதில் பேசிய பேச்சாளர் பேரறிஞர் அண்ணாவை வாய்க்கு வந்தபடி வசைபாடிக் கொண்டிருந்தார். காரை நிறுத்தச் சொல்லி, ஓர் ஓரத்தில் யாருக்கும் தெரியாமல் முழுவதும் கேட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார் பேரறிஞர் அண்ணா.
காரில் இருந்த நண்பர் அண்ணாவிடம், ‘ஏன் அண்ணா உங்களை அவர்கள் வசைபாடுகிறார்கள்’ என்று கேட்டார். அண்ணா பதில் ஏதும் பேசாமல் மௌனம் காத்தார். கொஞ்ச தூரம் சென்றபின், ஒரு மாட்டு வண்டியை பேரறிஞர் அண்ணாவின் கார் முந்த வேண்டி இருந்தது. ஓரமாகச் செலுத்தி மாட்டு வண்டியை கடந்தார்கள். அப்போது மாட்டு வண்டியை ஓட்டியவர், கார் டிரைவரை நோக்கி வசைபாடினார். அப்போது காருக்குள் இருந்த நண்பர்களிடம் பேரறிஞர் அண்ணா, ’பார்த்தீர்களா? கார் வேகமாகக் போகிறது. மாட்டு வண்டியால் இதற்குச் சமமாக வர முடியவில்லை. அதுதான் கோபம். அதனால் நம்மைத் திட்டுகிறார். அவருக்குச் சமமாக நாம் வசைபாடாமல் நம் வேகத்தை அதிகரித்து, போக வேண்டிய இடத்தை அடைய வேண்டும்.

நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும்
இந்த நிலைமையில்தான் அந்தப் பேச்சாளர் இருக்கிறார். நம் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் திட்டுவார்கள். நாம் அதைத் தாங்கிக்கொண்டு வளர்ச்சி வேகத்தைக் கூட்ட வேண்டும். பிறர் ஏசும் ஏச்சை உரமாக்கிக் கொண்டு வளர வேண்டும்’ என்றார். பேரறிஞர் அண்ணா சொன்னதைப் போல, நம் வளர்ச்சி, நமக்கு மக்களிடையே உள்ள ஆதரவு நம்மை நாகரிகமற்ற முறையில் பேசுபவரை கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் மக்களுடைய வெறுப்பிற்கும், தொண்டர்களுடைய கோபத்திற்கும் ஆளாகியுள்ளனர். அதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அந்த இயலாமைதான் நம்மேல் கோபமாக மாறி இருக்கிறது. இந்தக் கோபம்தான் நாகரிகமற்ற, பண்பாடற்ற, ஒழுங்கீனமான வார்த்தைகளை உபயோகப்படுத்த வைக்கிறது. இவற்றையெல்லாம் மனதில் நிலை நிறுத்தி, அரசியல்ரீதியாக நம்மை யாராவது தாக்கினாலும், சொல்லுக்குச் சொல், வாதத்திற்கு வாதம், பேச்சுக்கு பேச்சு என்ற அளவிலே நயத்தகு நாகரிகம் மிக்கவர்களாக நடந்துகொள்ள வேண்டுமே தவிர, அவர்கள் அநாகரிகமாக நடந்துகொள்கிறார்கள் என்பதற்காக நாமும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்” என அதில் கேட்டுக்கொண்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
ஜெ.பிரகாஷ்
டிஜிட்டல் திண்ணை: டெல்லி மெசேஜ்- எடப்பாடி ரிட்டர்ன், பொதுக்குழுவை கூட்டும் பன்னீர்
Comments are closed.