சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் 2ஆவது கடிதம்!

Published On:

| By Kalai

அதிமுக சார்பில் எந்த முடிவு எடுத்தாலும் தம்மிடம் கலந்தாலோசிக்கக் கோரி சபாநாயகர் அப்பாவுவுக்கு 2 ஆவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை வெடித்த நிலையில், ஜூலை 11ல் பொதுக்குழு நடத்தப்பட்டு இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

பொருளாளர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் எதிர்க்கட்சித்துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டார்.

இதுதொடர்பான கடிதத்தை அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சபாநாயகர் அப்பாவுவிடம் கொடுத்தார்.

ஆனால் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகவில்லை. எனவே சட்டமன்றக் குழுக்களை மாற்றுவது தொடர்பாக கடிதம் அளித்தால் அதை நிராகரிக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும் கடந்த ஜூலை மாதம் சபாநாயகரிடம் ஒரு கடிதம் கொடுத்திருந்தார்.

இந்தநிலையில் சட்டப்பேரவை வரும் 17 ஆம் தேதி கூடும் என்று அறிவித்த சபாநாயகரிடம் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வத்தின் கடிதங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, ”எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித்துணை தலைவர் இருவருமே கடிதங்கள் தந்திருக்கிறார்கள்.

அது எனது பரிசீலனையில் இருக்கிறது. சபை மரபுப்படியே அனைவருக்கும் இருக்கைகள் வழங்கப்படும். சட்டமன்ற மாண்புப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அது எடுக்கப்படும்” என்றார்.

இந்தநிலையில் இன்று(அக்டோபர் 11) சபாநாயகர் அப்பாவுவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்  ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.

பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்து  உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி கடிதம் எழுதப்பட்டுள்ளது.

“அதிமுவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்” என்று கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டம் 17ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கலை.ரா

எம்.எல்.ஏக்கள் கோரிக்கை : ஆய்வு செய்ய குழு அமைப்பு!

கொடநாடு வழக்கு : ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment