எடப்பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் : பன்னீர் மகன்!
அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ரவீந்திரநாத் எம்.பி, எடப்பாடி பழனிசாமிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி கே . பழனிசாமி நேற்று (ஜூலை 14 ) ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.உட்பட
வெங்கட்ராமன் (முன்னாள் எம்எல்ஏ),
கோபாலகிருஷ்ணன் (முன்னாள் எம்.பி),
வெல்லமண்டி நடராஜன் (திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர்),
சையது கான் (தேனி மாவட்டச் செயலாளர்),
ராமச்சந்திரன் (பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்),
சுப்பிரமணியன் (தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர்),
அசோகன் (கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர்),
ஓம்சக்தி சேகர் (புதுச்சேரி மேற்கு மாநிலச் செயலாளர் ),
ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ,
செல்வராஜ் (கோவை செய்தி தொடர்பாளர்),
அம்மன் வைரமுத்து (சென்னை புறநகர் மாவட்ட துணை செயலாளர் ),
ரமேஷ் (புரட்சித்தலைவி பேரவை துணைச் செயலாளர்),
வினுபாலன் (தகவல் தொழில் நுட்ப பிரிவு திருச்சி மண்டலச் செயலாளர்),
மருது அழகு ராஜ்( செய்தி தொடர்பாளர்),
கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி (வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்),
சைதை எம்.பாபு (முன்னாள் மாவட்டச் செயலாளர்),
அஞ்சு லட்சுமி (செயற்குழு உறுப்பினர்) ஆகிய 18 பேரை அதிமுகவில் அவர்கள் வகித்த வந்த பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கி அறிவிப்பு வெளியிட்டார்.
இதனைக் கண்டித்து தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் எம்.பி. சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு( ஜூலை 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “கழக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனக்குக் கொடுத்த வரம்… அதை நீக்கவும் , ஒதுக்கவும் , எடுக்கவும் கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம்…
கொள்ளைப்புற வழி வந்தவர்களுக்குக் கொள்கை விலகிச் சென்றது வெகுதூரம்!! பதவி கொடுத்தவர்களுக்கே பாதகம் விளைவித்த ” எடை ” இல்லா ” பாடி ”க்கு விடை கொடுக்க வேண்டி வந்துவிட்டது நேரம்… ஒன்றரை கோடி தொண்டர்களே ஒன்றிணைவோம் , ஒற்றுமையோடு வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.
ஒரே ஒரு அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்தை நீக்கி இருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம், இது அவர் எடுத்துள்ள தன்னிச்சையான முடிவு. எடப்பாடி பழனிசாமி எடுக்கும் எந்த முடிவும் கழக சட்டப்படி செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்