“போதுமா இந்த விளக்கம்” : சபரீசனுடனான சந்திப்பு பற்றி ஓபிஎஸ்

Published On:

| By Kavi

சென்னை சேப்பாக்கத்தில் சபரீசனை சந்தித்தது குறித்து இன்று(மே 8) ஓ.பன்னீர் செல்வம் விளக்கமளித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் (மே 6) சென்னை சேப்பாக்கத்தில் வைத்து முதல்வர் மருமகன் சபரீசனை சந்தித்தார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் நிலையிலும், ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையிலும் சபரீசனை ஓபிஎஸ் சந்தித்தது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் டிடிவி தினகரனை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வத்திடம் சபரீசனுடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து பேசிய ஓபிஎஸ், “நான் கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்கப்போனேன். அவரும் வந்திருந்தார். மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை” என்றார்.

இதையடுத்து திமுகவை எதிரி கட்சி என்று சொல்கிறீர்கள். அப்படி இருக்கும் போது சபரீசனை ஏன் சந்திக்க வேண்டும் என்று கேள்வி கேட்கும்போதே குறுக்கிட்டுப் பேசிய டிடிவி தினகரன்,

“என்னய்யா இது. ஒரு பப்ளிக் ப்ளேசில் சந்திச்சிருக்காங்க. ரகசியமாகச் சந்திக்க வேண்டுமென்றால் அவர்கள் சந்தித்திருப்பார்களா?” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “30ஆயிரம் பேர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த சோபாவில் நானும் அவரும் பேசியதை 10விஐபிக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். யாராக இருந்தாலும் மனிதனுக்கு மனிதன் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பண்பு எனக்கு இருக்கிறது.

அவர் உதவியாளர் மூலம் எனக்கு அழைப்பு விடுத்தார். ஒரு காபி சாப்பிடச் சொன்னார். நான் போய் பார்த்து காபி சாப்பிட்டு வந்தேன். அந்த விஐபிக்கள் எல்லாம் நாங்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் உங்களுக்கு நண்பர்களாக இருந்தால், நாங்கள் என்ன பேசினோம் என்று கேளுங்கள். போதுமா இந்த விளக்கம். விளக்கம் சொல்லியே நான் ஓய்ந்துபோகவேண்டும்” என்று நகைச்சுவையாக பேசினார்.

பிரியா

டிடிவி தினகரனை சந்தித்தது ஏன்?: பன்னீர் விளக்கம்!

WTC Final: இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம் செய்த பிசிசிஐ

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment