திமுக பொதுக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாகப் பேசியதாக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 4 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் பணியாற்றியுள்ளேன். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளேன்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசங்கள் உண்டு. இவர்கள் மத்தியில் ராட்சசியை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த பாவத்தின் பலனை 10 ஆண்டுக்காலம் அனுபவித்தோம்” என்று கூறினார்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து இன்று (ஜனவரி 6) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “ எம்.ஜி.ஆரால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழக மக்களின் அன்பைப் பெற்ற அம்மாவை அறிமுகப்படுத்தியதில் தனக்கும் பங்கு உண்டு என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது கேலிக்கூத்தாகவும், நகைப்புக்குரியதாகவும் உள்ளது. இதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
பதவிக்காகக் கட்சி மாறி, அமைச்சராகியுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தான் சார்ந்துள்ள கட்சியின் தலைமையைக் குளிர்விக்க வேண்டுமென்று நினைத்தால், அவர் சார்ந்துள்ள கட்சியின் தலைவரைத் துதிபாடலாம்.
அதில் எங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை. அதே சமயத்தில், அதிமுக நிரந்தரப் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவை சிறுமைப்படுத்திப் பேசுவது என்பது ஒழுக்கமற்ற, பொறுப்பற்ற செயல். கண்டிக்கத்தக்கது.
ஓர் அமைச்சராகப் பதவி வகிப்பவருக்கு ஒழுக்கம் மிக மிக அவசியம். ஒழுக்கம் உடையவர்கள் தவறியும் கூட தன் வாயால் தகாத சொற்களைப் பேச மாட்டார்கள்.
ஆனால், இதற்கு முற்றிலும் முரணாக ஒழுக்கமற்ற முறையில் நாகூசும் வார்த்தைகளை ராமச்சந்திரன் பேசியிருப்பது வெட்கக்கேடான செயல்.
தன்னுடைய தரம் தாழ்ந்த பேச்சின் மூலம் அமைச்சர் பதவிக்கே இழுக்கைத் தேடிக் கொடுத்து இருக்கிறார் ராமச்சந்திரன்.
இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் செம்மை புரிவது ஒழுக்கம் என்பதை மனதில் கொண்டு நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவிப்பதையும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தவிர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இனி வருங்காலங்களில்,
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு”
என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நடந்து கொள்வதுதான் அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்கு அழகாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
கமல் லிங்குசாமி இணையும் புதிய படம்?
கலைஞர் பெயரை மறந்ததா, மறைத்ததா பபாசி? தங்கம் தென்னரசு வைத்த குட்டு!