ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகத்தை விட்டு வெளியே வந்த நிலையில் சீல் வைப்பதற்கான பணிகளை வருவாய்த் துறையினர் மேற்கொண்டுள்ளனர். வெளியே வந்த பன்னீர் உடனடியாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகத்துக்கு வந்து ஆலோசனையில் ஈடுபட்டார். அடுத்தகட்ட நடவடிக்கையாக நீதிமன்றத்தை நாடுவது தொடர்பாகப் பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனிடையே ஓபிஎஸை தலைமை அலுவலகத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு ராயப்பேட்டை காவல்நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் மயிலாப்பூர் ஆர்டிஓ சாய்வர்தினி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ஓபிஎஸ். தொடர்ந்து கோட்டாட்சியர் சாய்வர்தினி ஓபிஎஸ் தரப்போடு பேச்சுவார்த்தை நடத்தினார். எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கும் சூழ்நிலையில் நீங்கள் இங்கிருந்து வெளியே செல்வதுதான் நல்லது என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் பன்னீர் தரப்பினர் நாங்கள் தான் கட்சியின் தலைமை நிர்வாகிகள் என்று தொடர்ந்து வாதிட்டு வந்தனர். ஆனால் ஒருகட்டத்தில் பன்னீர் செல்வம் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார்.
இதையடுத்து பாதுகாப்பு நிலவரம் கருதி அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைப்பதற்கு வருவாய் துறையினர் ஏற்பாடுகள் செய்தார்கள். மறுபக்கம் வெளியே வந்த ஓ.பன்னீர் செல்வம் அலுவலகத்துக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
-பிரியா