உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு பாதிப்புகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக, கொரோனாவின் இரண்டாம் அலையின் போது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. மருத்துவத் துறையில் அதிகப்படியான செவிலியர்கள் தேவைப்பட்டதால் தற்காலிக செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர்.
இந்த ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்றின்போது தன்னலம் கருதாது கொரோனா நோயாளிகளுக்காகப் பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களை வீட்டிற்கு அனுப்பிய நிலையில் தற்போது ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நீட்டிப்பு இல்லை என்று திமுக அரசு வீட்டிற்கு அனுப்பியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜனவரி 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக-வின் தேர்தல் அறிக்கை எண் 356 “ஒப்பந்த நியமன முறையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தங்களது பணி, நிரந்தரம் செய்யப்படும் என்று எண்ணியிருந்த ஒப்பந்த மருத்துவர்கள் மற்றும் ஒப்பந்த செவிலியர்களின் வாழ்க்கையை வஞ்சிக்கும் வகையில்,
2022-ம் ஆண்டு புத்தாண்டு பரிசாக ஒப்பந்த மருத்துவர்களை வீட்டிற்கு அனுப்பிய திமுக அரசு, 2023-ம் ஆண்டு புத்தாண்டு பரிசாக ஒப்பந்த செவிலியர்களையும் வீட்டிற்கு அனுப்பி அவர்களது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எப்போதும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை வசதியாக மறந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள திமுக அரசு, ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று வெளியிட்ட அரசாணைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உடனடியாக இந்த அரசாணையை ரத்து செய்து, தொடர்ந்து ஒப்பந்த செவிலியர்கள் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிகாலையில் சோகம்: பத்திரிக்கையாளர் மரணம்!
ஒரே ஆண்டில் ரூ. 5000 விலையேறிய தங்கம்!