ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட்டை இழந்துள்ளார். ntk seetha failed to get deposit
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குகள் இன்று (பிப்ரவரி 8) எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதுமுதலே திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் முன்னிலையில் இருந்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
குறிப்பாக 7வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், சந்திர குமார் 55,849 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 12,028 வாக்குகள் பெற்று பின்னடைவில் இருந்தார்.
அதேபோன்று 15வது சுற்றில் சந்திரகுமார், 1,02,480 வாக்குகளை பெற்ற நிலையில், சீதாலட்சுமி 21,802 வாக்குகளை பெற்றார்.
மோசமான சாதனை! ntk seetha failed to get deposit
அவர் டெபாசிட் பெற மொத்தம் 25,673 வாக்குகள் தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 17 வாக்கு சுற்றுகள் முடிவில் சீதாலட்சுமி வெறும் 23,810 வாக்குகளை மட்டுமே பெற்று தனது டெபாசிட்டை இழந்துள்ளார். அவருடன் சுயேச்சையாக போட்டியிட்ட 44 பேரும் தங்களது டெபாசிட்டை இழந்தனர்.
இதன்மூலம் 2021 சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூரில் தோல்வியடைந்த சீமானை தவிர்த்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யாருமே இதுவரை தேர்தலில் டெபாசிட் பெற்றதில்லை என்ற பரிதாப சாதனை தொடர்கிறது.
அதே வேளையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், 90,629 வாக்குகள் வித்தியாசத்துடன் மொத்தம் 1,14,439 வாக்குகள் பெற்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளார்.