சனாதனத்தை ஒழிக்க திமுக செய்த முயற்சிகள் என்ன என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ( செப்டம்பர் 6) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “உதயநிதி சனாதனம் என்ற ஒன்றைப் பேசப்போக சங்கிகள் அதை பிடித்து தொங்குகின்றனர். மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், உத்தவ் தாக்ரே போன்றவர்கள் எல்லாம் எதிர்க்கின்றனர்.
உதயநிதிக்கு சனாதனம் என்றால் என்னவென்று தெரியாது. அவர் நண்பன் சந்தானத்தைத் தான் தெரியும்” என்றார்.
”சனாதனத்தை ஒழிக்க திமுக செய்த முயற்சி என்ன? இதுவரை திமுக ஒரு பொதுத்தொகுதியில் ஒரு தேவேந்திரரையோ அல்லது பறையரையோ நிறுத்தி இருக்கிறதா?
ஆனால், காமராஜர் அயோத்திதாசரின் பேரன் பரமேஷ்வரனை அழைத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக போட்டார். அப்போது காமராஜரிடம், ‘என்னங்கய்யா நீங்க ஒரு தாழ்த்தப்பட்டவரை அறநிலையத்துறை அமைச்சரா போட்டுடீங்க’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது காமராஜர், ‘எத்தனை நாட்களுக்கு என்னை கோவிலுக்குள் விடு என்றே போராடிக்கொண்டிருக்க முடியும்..இனி இவர்கள் பரமேஷ்வரனுக்கும் தலைப்பாகை கட்டித்தானே ஆக வேண்டும்’என்றார்.
அது புரட்சி. அது சனாதன ஒழிப்பு. நீங்கள் பார்ப்பனப் பெண் என்று சொன்ன ஜெயலலிதா திருச்சியில் பொதுத்தொகுதியில் தலித் ஒருவரை நிறுத்தி வெல்ல வைத்தார். அது சனாதன ஒழிப்பு.
அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தனபாலை இரண்டு முறை ஜெயலலிதா சபாநாயகராக்கினார். அப்படி எதாவது திமுக செய்திருக்கிறதா?
கலைஞர் இருக்கும் பொழுது மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தாரே… அப்படி இப்போது அந்த இடத்தில் ஒரு தேவேந்திரரையோ அல்லது பறையரையோ துணை முதல்வராக போடச்சொல்லுங்கள் பார்ப்போம்.
அப்படிச் செய்தால் அதை சனாதன ஒழிப்பிற்கான முயற்சியாக பார்க்கலாம். வேங்கைவயலில் எடுத்த நடவடிக்கை என்ன? மேல்பாதியில் கோவிலை பூட்டினார்கள்… அப்போது கோவிலை திறந்து அங்கு உள்ளே நுழைந்து சாமி கும்பிட வைத்திருந்தால் அது சனாதன ஒழிப்பிற்கான முயற்சி.
ஆனால் நீங்கள் கோவிலை பூட்டி விட்டு சாவியை எடுத்து வந்தீர்கள்… இது தான் உங்கள் சனாதன ஒழிப்பா? ” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் எங்கள் அண்ணன் திருமாவளவனை சிதம்பரம் தொகுதியைத் தாண்டி வேறு எங்கும் பாராளுமன்ற தேர்தலின் போது பரப்புரைக்கு ஏன் அழைத்துச் செல்ல வில்லை.
அதே கட்சியை சேர்ந்த ரவிக்குமார் நின்ற விழுப்புரம் தொகுதிக்கு கூட திருமாவளவனை பிரசாரத்திற்கு அழைக்காதது ஏன்?
வரும் பாராளுமன்ற தேர்தலின் போது திருமாவளவனை 40 தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்கு அழைத்துச் செல்வீர்களா? கூட்டணிக் கட்சிகளின் கொடியில் இருந்த விசிக கொடியை மட்டும் அறுத்தது யார்? இது தான் உங்கள் சனாதன ஒழிப்பா?
கூட்டணிக்கட்சிகளின் படத்தில் திருமாவின் படத்தை மட்டும் வெள்ளை பேப்பரை வைத்து ஒட்டியது யார்? நீங்கள் எல்லாம் அமரும் இடத்தில் அவரை எங்கு அமரவைக்கிறீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மேலும், “ வீட்டிற்கு அய்யர்களை அழைத்து வந்து பூஜை நடத்துவது தான் சனாதன ஒழிப்பா?” எனவும் கேள்வி எழுப்பினார் சீமான்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சனாதனம் எல்லா மதத்திற்கும் பொதுவானது: டிடிவி புது விளக்கம்!
உதயநிதி ஸ்டாலின் மீது எஃப்.ஐ.ஆர்!