விசிக தலைவர் திருமாவளவன் விஜய்யுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (நவம்பர் 2) தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “திராவிடம் என்பது தமிழ்தேசிய இன மக்களை எப்படியாவது ஆள வேண்டும் என்று துடிக்கும் கொள்கை. தமிழ்த்தேசியம் என்பது மற்ற மொழி வழி தேசிய இனங்களைப் போல தமிழர்களும் உயர்ந்து சிறந்து பெருமையுடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் கொள்கை. பின்னர் எப்படி திராவிடமும் தமிழ் தேசியமும் விஜய்க்கு இரண்டு கண்களாக இருக்க முடியும்?
எனக்கு கொள்கை மொழி தமிழ் மட்டும் தான். எப்படி இரு மொழி கொள்கை இருக்க முடியும்? இரு மொழி கொள்கை என்பது ஏமாற்றுக் கொள்கை.
மதச்சார்பற்ற சமூக நீதியே எங்கள் கொள்கை என்கிறார் விஜய். பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு கொள்கையை அவர் ஏற்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா? அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டில் அவருடைய நிலைப்பாடு என்ன?
தம்பி என்ற உறவு வேறு, கொள்கை முரண் வேறு. ஆளுநர் வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால், அதற்கான காரணத்தை தெளிவாக விளக்கவில்லை.
திராவிடத்தை வாழ வைக்கத்தான் கட்சி ஆரம்பித்திருக்கிறாரா விஜய். திராவிடம் மிக வலுவாக 75 ஆண்டுகளாக இருக்கிறது. அப்புறம் ஏன் புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும்.
மஞ்சள் மங்களகரமானது என்பதால் கட்சி கொடியில் மஞ்சள் வண்ணம் பூசியிருக்கிறோம் என்று விளக்கம் சொல்கிறார்கள். தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடப்போகிறார்களா?
திருமாவளவனின் மாணவர்கள் தான் நாங்கள். விஜய்யுடன் கூட்டணி வைக்கும் சிறு பிள்ளைத்தனமான வேலைகளை அவர் செய்ய மாட்டார். நானே இவ்வளவு நிதானமாக செயல்படும்போது. திருமாவளவன் இன்னும் ஆழமாக யோசிப்பார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரே மேடையில் திருமா – விஜய்யா? சூடு பிடிக்கும் அரசியல் களம்!
புரோ கபடி: முதல் இடத்தை பிடித்து தமிழ் தலைவாஸ் அசத்தல்!