“என்ஐஏ அதிகாரிகள் எனக்கு தான் அழைப்பாணை கொடுத்து விசாரித்திருக்க வேண்டும். ஆனால், கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள்” என்று, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்ரவரி 2) தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் அமைப்புக்கு பணம் கொடுத்ததாக சென்னை, கோவை, திருச்சி, சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 2) காலை சோதனை நடத்தினர்.
சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், என் ஐ ஏ சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சீமான், “நாம் தமிழர் கட்சி என்பது மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஒரு அரசியல் இயக்கம். அரசு மற்றும் காவல்துறை அனுமதியோடு தான் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறோம்.
சட்டம், ஒழுங்கு சீர்குலையும் நோக்கோடு நாம் தமிழர் கட்சி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. உளவுத்துறை, காவல்துறையை வைத்து கண்காணித்துவிட்டு, திடீரென்று என்ஐஏ சோதனை நடத்துவது என்பது தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தி பார்ப்பது தான்.
விடுதலை புலிகள் அமைப்புக்கு நீங்கள் பணம் அனுப்புகிறீர்களா? என்று என்ஐஏ கேட்கிறார்கள். விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து எனக்கு பணம் வருவதாக பல நாட்களாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
விடுதலை புலிகள் அமைப்பு எங்கே இருக்கிறது? விடுதலை புலிகளை அழித்து விட்டதாக நீங்கள் தானே சொல்கிறீர்கள். யூடியூப் சேனல் நடத்துவதால் பணம் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
யூடியூப் சேனல் நடத்தி அதில் கிடைக்கும் வருவாயை வைத்து ஒரு இயக்கம் நடத்த பணம் கொடுக்க முடியும் என்பது வேடிக்கையாக உள்ளது. நியாயமாக என்னை தான் அழைப்பாணை கொடுத்து விசாரித்திருக்க வேண்டும். கட்சியை வழிநடத்தி போகிற ஆள் நான் தான். என்னை மீறி கட்சியில் என்ன நடக்கும்?
என் தம்பி துரை யூடியூப் சேனல் வைத்திருக்கிறான், இரண்டு முறை சிறை சென்றுள்ளான். ஆனால் கார்த்திக், தென்னகம் விஷ்ணு போன்ற சின்ன, சின்ன தம்பிமார்கள் வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளார்கள்.
சோதனையின் போது, வீட்டில் இருந்த நெடுமாறன் எழுதிய பிரபாகரன் ‘பெரும் எழுச்சியின் வடிவம்’ என்ற புத்தகத்தை எடுத்து விசாரிக்கிறார்கள் அண்ணா என்று என்னிடம் கூறினார்கள். புத்தகத்தை கொடுத்துவிடு…அப்படியாவது படித்து தெரிந்து கொள்ளட்டும் என்று தம்பிமார்களிடம் சொன்னேன்.
மேலும், அவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி 5-ஆம் தேதி என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக அழைப்பாணை கொடுத்துள்ளார்கள். அன்றைய தினம் நானே ஆஜராக உள்ளேன்.
என்ஐஏ கேள்விகளுக்கு நான் பதில் சொல்லி விடுகிறேன். சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டிருந்தால், நடவடிக்கை எடுங்கள்.
மத்திய அரசு என்னை தான் குறிவைத்துள்ளார்கள். முதலில் கட்சி நிர்வாகிகளை கைது செய்த பின்னர் தேர்தல் நேரத்தில் என்னை கைது செய்வார்கள். அதனால் என்ஐஏ சோதனை என்பது எதிர்பார்த்தது தான்”, என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“கைது செய்வதுதான் மோடியின் நோக்கம்” : 5ஆவது முறையாக ED சம்மனை புறக்கணித்த கெஜ்ரிவால்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
விஜய் புதிய கட்சி: புஸ்ஸி ஆனந்த் சொல்வது என்ன?