சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 3) சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “தொடர்ச்சியாக நீங்கள் இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்களுக்கு எதிராக பேசிவருவதாகவும் தாய்மதம் திரும்பச் சொல்லி கூறுவதாகவும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றாச்சாட்டு வைத்துள்ளாரே” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சீமான், “தாய் மதம் திரும்புங்கள் என்பது பொதுவான ஒரு கோரிக்கை. என்னுடைய சமயம் சைவம் மற்றும் வைணவம். வில்லியம் ஜோன்ஸ் போட்ட கையெழுத்தால் தான் நாங்கள் இந்துக்களாகவும், பெளத்தர்களாகவும், சீக்கியர்களாகவும் ஆனோம்.
நான் சைவனாக இருந்தால் தான் அந்த மடத்தின் தலைவனாக என்னுள் ஒருவன் இருப்பான். நான் இந்து என்றால் அதற்கு வேறொருவன் தலைவன் ஆகிவிடுவான். உதயசூரியன் சின்னத்தில் ஒரு சீட்டு வேண்டும் என்பதற்காக ஜவாஹிருல்லா அப்படித்தான் பேசுவார். அவர் அதிமுக கூட்டணியில் இருந்த போது பேசியதை ஒருமுறை கேட்டுப்பாருங்கள்” என்றார்.
ஸ்டாலினை சிறுபான்மையினர் என்று சொல்கிறீர்கள் ஆனால் அவரை எல்லா சமூக மக்களும் தான் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற கேள்விக்கு, “ஓட்டுக்கு பணம் கொடுத்து வென்றவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆகிவிடுவார்களா” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இஸ்லாமியர்களை சிறுபான்மையினர் என்று சொல்வதை நான் வெறுக்கிறேன்.
இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டும் அநீதிக்கு எதிராக பிறந்தவை. அநீதிக்கு எதிரான புரட்சித் தீயை பற்ற வைக்கவே நான் வந்தேன் என்று இயேசு கூறினார். எங்கே அந்தத் தீ. இந்த நாட்டில் மாறி மாறி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆட்சி நடக்கிறது. இதை எப்படி சகித்து கொள்கிறீர்கள்? 58 நிமிடம் அக்கறையாக பேசினேன்.
2 நிமிடம் பேசியது மட்டுமே தெரிகிறது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட முடியாது. என்னுடைய பேரன்பின் வெளிப்பாடுதான் இது. என்னுடைய பெரும் கோபத்தில் உள்ள பேரன்பினை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு திமுக, காங்கிரஸ் செய்த ஒரு நன்மையை சொல்ல முடியுமா? தவறு என்று தெரிந்தால், சுட்டிக்காட்டுவது எனது கடமை. சாத்தான் என்பது குர்ஆன் மற்றும் பைபிலில் உள்ள வார்த்தை. இதை நான் கூறவில்லை. நபிகள், இயேசு கூறியுள்ளனர்.
சாத்தானின் செயல்களை இந்த ஆட்சியாளர்கள் செய்கின்றனர். அநீதி இழைப்பவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை குர்ஆன் சாத்தானின் நண்பர்கள் என்று கூறுகிறது. நான் சாத்தானின் குழந்தைகள் என்று கூறிவிட்டேன். இதை வேண்டும் என்றால் தவறு என்று கூறலாம்.
மதத்தை வைத்து மனிதர்களை கணக்கிடுவது என்பது உலக வரலாற்றில் இல்லை. எல்லாவற்றையும் விட பெரியது மொழி, இனம்தான். இங்கு உள்ள கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தமிழர்கள்.
சிறுபான்மை என்று கூறினால் நான் வெறிகொண்டு விடுவேன். யார் சிறுபான்மை? சிறுபான்மை என்று எப்படி கூறுகிறார்கள். மதம் மாறிக் கொள்ளலாம். மொழி, இனத்தை மாற்றிக்கொள்ள முடியாது. அநீதிக்கு துணை நிற்பவர்களை கூறினேன். மொத்தமாக அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் கூறவில்லை.
அவர்கள் சாத்தானின் குழந்தைகள் என்று கூறவில்லை. சாத்தானின் குழந்தைகளாக மாறி வீட்டீர்களே என்று ஆதங்கப்படுகிறேன்” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
’பீட்சா 4′ : அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!