நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “விவசாயி சின்னத்தை பக்கத்து மாநில கட்சிக்கு ஒதுக்கியது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் இன்று (பிப்ரவரி 19) மனு அளிக்கப்பட்டது.
பின்னர் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “Symbol Allotment Rules 10 (b)-ல் சின்னம் தெளிவாக குறித்து உள்ளது. ஏற்கனவே இரண்டு பொதுத்தேர்தல்களில் ஒரு கட்சி ஒரே சின்னத்தில் போட்டியிட்டிருந்தால், அந்த கட்சிக்கு தான் சின்னத்தை ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அதனடிப்படையில் விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், நிர்வாக கோளாறு காரணமாக, வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்து இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து மனு அளித்துள்ளோம்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
உடனடியாக உங்கள் மனு டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…