கவிஞர் என்றும் கவிப்பேரரசு என்றும் பலராலும் அழைக்கப்படும் வைரமுத்து திரையுலகில் சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் சொந்தக் காரர். கண்ணதாசன், வாலி வரிசையில் தமிழ் திரையுலகில் நிலைத்த புகழ் பெற்று விளங்கும் வைரமுத்து இலக்கிய உலகிலும் பல மைல் கற்களைக் கடந்துள்ளார்.’
‘இந்த நிலையில் இன்று (நவம்பர் 16) சென்னை பெசன்ட் நகரிலுள்ள தனது வீட்டில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்த வைரமுத்து அவர்களிடையே பேசிய பேச்சு அவரது அடுத்த கட்ட பயணத்துக்கான எரிபொருளாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வைரமுத்துவின் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
வைரமுத்து சினிமாவில் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் நிற்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தவர். தன் சாம்ராஜ்யத்தை அவர் சினிமா உலகத்தில் நிறுவிவிட்டார். அதனால் இப்போது சினிமா, இலக்கியத்தைத் தாண்டியும் மொழி, சமூகத்துக்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்ற யோசனையின் வெளிப்பாடுதான் இந்த ஆலோசனைக் கூட்டம்.
சில வாரங்களுக்கு முன் வள்ளுவர் கோட்டத்தில் வைரமுத்து தலைமையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் இந்தித் திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் வைரமுத்து. தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் அப்போதே தமிழ் அமைப்புகளிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் எல்லாம் வைரமுத்துவை சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்பியிருக்கிறார்கள். இதற்காக வைரமுத்துவை சந்திக்க நேரம் கேட்டனர். அப்போது வைரமுத்து, ‘வாங்க சந்திப்போம். சில முக்கிய விஷயங்களை பேசுவோம்’ என்று கூறினார்.
அதன்படியே நவம்பர் 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை மற்றும் சென்னைக்கு அருகே உள்ள தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகள் வைரமுத்துவை சந்தித்தோம். வடசென்னை தமிழ்ச் சங்கம், தலைநகர் தமிழ் சங்கம் தொன்மை தமிழ் சங்கம், கொளத்தூர் கலை இலக்கிய மன்றம், கலந்துரையாடல் குழுமம், துவக்கு உள்ளிட்ட 25 தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் வைரமுத்து வீட்டில் திரண்டார்கள்.
அனைவரையும் வரவேற்று வடை, காபி கொடுத்து உபசரித்து அவரது இல்ல வளாகத்திலேயே ஒரு சிறு கூட்டமாக இதை ஆக்கிவிட்டார். ஒவ்வொரு தமிழ் அமைப்பின் நிர்வாகியும் வைரமுத்துவிடம் தங்களை சுய அறிமுகம் செய்துகொண்டனர். வைரமுத்துவுக்கு பெரும் மகிழ்ச்சி. திரண்ட தமிழ் அமைப்பின் நிர்வாகிகளிடையே வைரமுத்து பேசினார்.
”தமிழின் பேரால் நாம் எல்லாரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல உலகம் முழுதுமுள்ள இலக்கிய ஆர்வலர்களை அமைப்புகளை ஒரே குடைக்குள் கொண்டுவர வேண்டும்.
தமிழ் கூட்டமைப்பு என்ற பெயரில் நாம் இந்திக்கு எதிராக திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதே தமிழ் கூட்டமைப்பு என்ற பெயரிலேயே இனி நாம் தொடர்ந்து செயல்படுவோம். அந்தந்த அமைப்புகள் அப்படியே செயல்படட்டும்.
அதேநேரம் தமிழ் கூட்டமைப்பு என்ற பெயரில் இணைந்து உலகம் தழுவிய இயக்கமாக இதை மாற்றுவோம். நானும் எனக்கு பழக்கமான மற்ற தமிழ் அமைப்புகளோடு பேசிவருகிறேன். மிகப்பெரிய அளவில் தமிழ் கூட்டமைப்பை ஒன்று திரட்டுவோம்.
இவ்வளவு நாள் கழித்து இப்போது இதை ஏன் வைரமுத்து செய்கிறார் என்று கேள்வி எழலாம். நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது மொழியுரிமை நசுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்ச் சூழலில் ஓர் இக்கட்டான நிலை இருக்கிறது. அதனால் ஓர் பேரமைப்பை உருவாக்க வேண்டிய அவசியமும் அவசரமும் நமக்கு ஏற்பட்டுள்ளது.
போர் வரும்போது ஒன்றிணைவதும் அதன் பிறகு சிதறிவிடுவதும் தமிழர்களின் வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஒர் அரசாங்கம் போர் இல்லாத கால கட்டத்தில் கூட தன் படைகளுக்குத் தேவையானவற்றை செய்து படைகளை பராமரிக்கும். அப்போதுதான் போர் வரும்போது அந்த படை வெல்ல முடியும். போர் வரும்போது மட்டும் இயங்கும் படைகளாக இல்லாமல் தொடர்ந்து இயங்கும்படியான தமிழ் காக்கும் படையாக நாம் செயல்படுவோம்.
இனி இந்த கூட்டமைப்பில் நான் தீவிரமாக இயங்க திடமாக இருக்கிறேன். விரைவில் ஒரு பெரிய திருமண மண்டபத்தில் அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்று திரட்டி தமிழ் கூட்டமைப்பு என்கிற பேரமைப்பைத் தொடங்குவோம்” என்று பேசியிருக்கிறார் வைரமுத்து.
இனி வைரமுத்து தலைமையில் தமிழ் கூட்டமைப்பு எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
–ஆரா