திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. அதில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
2008 – 13 வரை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் 300 கோடிக்குப் படம் எடுத்திருக்கிறார் இதற்குப் பணம் எங்கே இருந்து வந்தது ? என்று கேள்வி எழுப்பியிருந்தார் அண்ணாமலை. தற்போது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.2,010 கோடி” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு உதயநிதி ஸ்டாலின் மறுப்புத் தெரிவித்திருந்தார். சென்னையில் இன்று (ஏப்ரல் 19) காலை நடைபெற்ற தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “2007-2022 வரை திரைத்துறையில் பயணித்திருக்கிறேன். 4 மாதங்களாக அதிலிருந்து விலகியிருக்கிறேன். 15 ஆண்டுகளாக ரெட் ஜெய்ண்ட் இயங்கிக் கொண்டிருக்கிறது. 15 நேரடி படங்களைத் தயாரித்திருக்கிறேன்.15 படங்களில் நடித்துள்ளேன்.
மூன்று நாட்களுக்கு முன்பு ஒருவர், ரெட் ஜெய்ண்ட் நிறுவனத்தின் மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறியிருக்கிறார். இங்கிருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் உண்மை என்னவென்று தெரியும். அதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் இன்னொரு தயாரிப்பாளருக்குத் தான் தெரியும். போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுப் போகிறார்கள்” என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் தமிழக பாஜக தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளைக் கூறியதாகத் தெரிவித்து அனுப்பியுள்ள நோட்டீஸில், 48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் 50 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும். மான நஷ்ட ஈடாக ரூ.50 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அது முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்டு, அதனை செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் பிரசுரிக்க வேண்டும் எனவும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
பிரியா
நான் தி.மு.க காரனா? கைய கட்டிட்டு பேசணுமா? சீறிய திருமா
சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி!