தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக பெரிய கட்சி என்பதால் அதன் தலைமையில் கூட்டணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை தியாகராயர் நகரில், இன்று(நவம்பர் 7) மோடியின் தமிழகம் என்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசினார்.
அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்ற பழனிசாமி கூறியிருந்த நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்தார்.
“அதிமுக பெரிய கட்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் அதிமுக ஓரு மிகப்பெரிய கட்சி. பலம் வாய்ந்த கட்சி.
பல காலக்கட்டங்களில் தொடர்ந்து ஆட்சியில் இருந்த கட்சி. எடப்பாடி அண்ணன் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை. 2021 தேர்தல் அதிமுக தலைமையில் தான் கூட்டணி இருந்தது.
இன்றைக்கும் அதிமுக கூட்டணியில் தான் இருந்து கொண்டிருக்கிறோம். அதிமுக தலைமையில் கூட்டணி என்பதில் எந்தவித குழப்பமும் இல்லை. எப்போதும் இருந்ததும் கிடையாது. அதனால் இதில் எந்த தவறும் இல்லை” என்று அண்ணாமலை பேசினார்.
மெகா கூட்டணி அமைப்பது குறித்து டி.டி.வி. தினகரன் கூறிய கருத்து பற்றி அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பல தலைவர்கள் பல கருத்துகளை சொல்லியிருக்கிறார்கள்.
திமுகவை வீழ்த்துவதற்கு எந்தவிதமான கூட்டணியும் ஏற்பதற்கு தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். புதிதாக வரக்கூடிய கட்சி, ஒரு இணைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றியும், புதிய கூட்டணி பற்றியும் பேசுவதற்கும் எனக்கு இப்போது அதிகாரம் இல்லை.
அதையெல்லாம் சென்ட்ரல் பார்லிமென்டரி போர்டு தான் முடிவு செய்யும். தேசிய தலைவருக்கு தான் அதைப்பற்றியெல்லாம் தெரியும். எனவே நேரம், காலம் வரும்போது அதைப்பற்றி பேசுகிறேன் என்றார்.
கலை.ரா
“நூற்றாண்டு கால போராட்டத்தில் பின்னடைவு”- 10% இட ஒதுக்கீடு தீர்ப்பு குறித்து ஸ்டாலின்
10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பின் மீது மறுசீராய்வு அவசியம்: கி. வீரமணி