ஜி 20 மாநாடு தொடர்பான டின்னருக்காக குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய அழைப்பிதழில், ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்பதற்கு பதிலாக, ‘பாரத குடியரசுத் தலைவர்’ என்ற வார்த்தை அச்சடிக்கப்பட்டிருப்பது, நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாரத் என்று சொல்வது தவறில்லை என்றும் அது அரசியல் சாசனத்தில் உள்ளது என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று (செப்டம்பர் 5) திமுக பொருளாளரும், திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை.
தமிழ்நாட்டில் ஆட்சி முடிவதற்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது என்ன செய்வார்கள். அந்த இரண்டரை வருடங்களை இல்லை என்று சொல்லி புதிதாக ஒரு தேர்தல் நடத்துவார்களா?
இதில் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. இதனை மாநில அரசுகள் அங்கீகரிக்க வேண்டும். பின்னர் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டமாக மாறி வரும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சிறப்பு கூட்டத்தொடர் குறித்த கேள்விக்கு, “இந்த சிறப்பு கூட்டத்தொடரை மத்திய அரசு எப்படி பயன்படுத்தப்போகிறது என்பதற்கான தெளிவான முடிவு வரவில்லை. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் எது குறித்து பேசப் போகிறார்கள். 4 நாட்களில் என்ன முடிவு எடுக்க முடியும் என்பதெல்லாம் விந்தையாக இருக்கிறது. அவர்களுடைய ஆட்சியில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத பல விஷயங்களைக் கொண்டு வருகிறார்கள்.
ஒருவேளை நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு உரிமை கொடுப்பது தொடர்பாக கூட ஏதாவது பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை நீண்ட நாள் கோரிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா கூட்டணி பெண்களுக்கான உரிமை குறித்து ஆதரவாக தான் பேசும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்ப்பது தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஏதேனும் தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று இன்று இரவு 8 மணிக்குள் முடிவாகும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்தியா என்ற பெயரை பாரத் என்று சொல்வது தொடர்பான கேள்விக்கு, “பாரத் என்ற சொல் ஏற்கனவே அரசியல் சாசனத்தில் இருக்கின்றது. அதை இல்லை என்று சொல்ல முடியாது. 303 பேர் என்ற பெரும்பான்மை அவர்களிடம் இருக்கிறது. அதனால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அவர்களுடைய அகங்கார நடவடிக்கைகளை தான் இது காட்டுகிறது.
திடீரென்று எதனால் இந்தியா என்பதை பாரத் என்று சொல்கிறார்கள் என்பதற்கு யூகங்களின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது. ஆனால் பாரத் என்று சொல்வதை தவறு என்று சொல்லும் அளவிற்கு இல்லை. ஏனென்றால் அரசியல் சாசனத்தில் இருக்கின்றது.
எதிர்க்கட்சிகள் இந்தியா என்று பெயர் வைத்ததால் அவர்கள் இந்தியா என்ற வார்த்தையை சொல்வதற்கே பயப்படுகிறார்கள். நாளை தேர்தல் நடைபெறும் போது மோடி vs இந்தியா என்று தான் ஆகும். இதனை லட்சக்கணக்கான பேர் சொல்லப் போகிறார்கள். இதனால் பாரத் என்று சொல்வதால் எந்த பிரச்சனையும் இல்லை. இதனால் அவர்களால் வெற்றி பெற முடியாது.
இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் காலத்திலும் இருந்தது, அதற்கு முன்பும் இருந்தது. இப்போதும் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனை ஒரே நாளில் அவர்களால் மாற்றி அமைக்க முடியாது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் இருக்கிறது என்பதால் அதற்குள் மக்களை மாற்றியமைக்க முடியுமா?
நாங்கள் இந்தியா என்று பெயர் வைத்ததன் மூலம் அவர்கள் அந்த சொல்லுக்கு பதிலாக வேறு ஒரு சொல்ல பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதனால் பெரிய வெற்றியை அவர்களால் பெற முடியாது. அரசியல் சாசனத்தில் இந்தியா அல்லது பாரத் என்று இருக்கிறது. எனவே இதற்காகத் தனியாக மசோதா கொண்டு வருவதற்கும் அவசியம் இல்லை” என்று பேசினார்.
மோனிஷா
பல்லடம் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது!