”தமிழ் என்பதோ தெலுங்கு என்பதோ நமது அடையாளம் அல்ல. அம்பேத்கர் என்பதே நமது அடையாளம்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி பேசியிருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல், திருமாவளவன் சமீபமாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வளர்க்கவும் பரப்பவும் முனைந்து வருகிறார். அதற்காக இம்மாநிலங்களுக்கு அவ்வப்போது பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இம்மாநிலங்களில் இதுவரை இயங்கி வந்த தலித் அமைப்புகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு இணைத்து அங்கே கட்சிக் கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறார் திருமாவளவன்.
இந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று ஆந்திரா மாநிலத்துக்கு சென்றார் திருமாவளவன். விஜயவாடாவுக்கு விமானத்தில் சென்ற திருமாவளவன் அங்கே பல்வேறு அமைப்பினரையும் சந்தித்தார்.
அதன்பின் ஆந்திரா மாநிலம் தெனாலி சட்டமன்ற தொகுதி கொல்லிபார கிராமத்தில் அம்பேத்கர் திருவுருவச் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதற்காக சென்ற திருமாவளவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தெனாலியிலிருந்து கொல்லிபரா வரை 20 கிமீ தூரத்துக்கு பேரணியாக திருமாவளவன் அழைத்துச் செல்லப்பட்டார். 3.30 மணி நேரம் நடந்த இந்த பேரணியில் நீலக்கொடி ஏந்தி ஜெய்பீம் முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கப்பட்டன.
தெனாலி நகர மன்ற உறுப்பினரான சுரேந்தரின் ஏற்பாட்டில் நேற்று (மார்ச் 19) மாலை அம்பேத்கர் சிலை திறப்பு விழாவும், பொதுக்கூட்டமும் நடந்தது. இந்தக் கூட்டத்தில் திருமாவளவன் தமிழில் பேச, அதை தெலுங்கில் மொழிபெயர்த்தனர்.
“சென்னையில் எங்கள் வெளிச்சம் தொலைக்காட்சி அலுவலகத்தில் கூட இதேபோல்தான் அசோக சக்கரம் பதித்த பீடத்தில் அரை உருவ அம்பேத்கர் சிலையை அமைத்திருக்கிறோம். நமது உணர்வுகள் ஒன்று என்பதை நிரூபிப்பது போல இங்கே அதேபோன்ற பீடத்தில் முழு உருவ அம்பேத்கர் சிலையை அமைத்துள்ளீர்கள்.
அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டம்தான் இன்று தலித்துகளை, பிற்படுத்தப்பட்டவர்களை, சிறுபான்மை மக்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவின் ஒரே லட்சியம் அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுவதுதான்.
பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் அது நடந்துவிடும். அதனால் நாம் அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்து அவர் உருவாக்கிய புதிய இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும்” என்று பேசிய திருமாவளவன்,
“ஆந்திராவுக்கு தொடர்ந்து நான் வந்துசென்று கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது அழைத்தாலும் ஓடி வருவேன். அம்பேத்கரின் சிந்தனைகளை பரப்புவதற்கு உங்களோடு நிற்பேன். அரசமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏப்ரல் 8 ஆம் தேதி மதனப்பள்ளியிலும், ஏப்ரல் 17 ஆம் தேதி அமலாபுரத்திலும் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கு நீங்கள் எல்லாம் வரவேண்டும். மொழி நம்மை பிரித்தாலும் அம்பேத்கர் நம்மை இணைக்கிறார். தமிழ் என்பதோ தெலுங்கு என்பதோ நமது அடையாளம் இல்லை. அம்பேத்கர் என்பதுதான் நமது அடையாளம்.
அம்பேத்கர் என்கிற அடையாளத்தை உயர்த்திப் பிடிப்போம். அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்போம், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலை திறக்க எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார் திருமாவளவன்.
–ஆரா
மகளிருக்கு 29000 ரூபாய் வழங்குக: அண்ணாமலை கோரிக்கை!
அண்ணாசாலையில் மேம்பாலம்: பட்ஜெட்டில் அறிவிப்பு!