கேரளாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் திருச்சூர் எம்.பி.யும், நடிகருமான சுரேஷ் கோபி நேற்று (ஜூன் 9) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவியேற்ற நிலையில், சில மணி நேரங்களிலேயே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்திருப்பதாக வரும் தகவல்கள்… மோடி கேபினட்டை மையமாக வைத்து முதல் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
ஜூன் 9 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. கேரளாவில் இருந்து முதல் முறையாக பாஜக திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றது. திருச்சூர் தொகுதி எம்பி.யான பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டு மோடியிடமும் கை குலுக்கினார்.
ஆனால் விழா நடைபெற்ற சில மணி நேரங்களில் நேற்று இரவு மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுரேஷ் கோபி,
”எம்.பி.யாக பணியாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம். நான் எதையும் கேட்கவில்லை. எனக்கு இந்த அமைச்சர் பதவியெல்லாம் தேவையில்லை என்று கூறியிருந்தேன். நான் விரைவில் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவேன் என்று நினைக்கிறேன். திருச்சூர் வாக்காளர்களுக்கு இதனால் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு என்னைத் தெரியும். ஒரு எம்.பி.யாக நான் அவர்களுக்காக சிறப்பாக செயல்படுவேன். நடிப்பு மீதான எனது ஆர்வம் இன்னும் உள்ளது, மேலும் எனக்கு வரவிருக்கும் திரைப்பட திட்டங்கள் உள்ளன. கட்சிதான் இறுதி முடிவை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
நேற்று காலை 11.30 மணிக்கு டெல்லிக்கு புறப்படுவதற்கு முன், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கோபி “பிரதமர் மோடி என்னை அழைத்து இன்று அவரது இல்லத்தில் இருக்குமாறு கூறினார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்குகிறேன். எனது பிரச்சாரத்தின் போது நான் உறுதியளித்தபடி எம்.பி.யாக பணியாற்றுவதே எனக்கு முன்னுரிமை” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் பதவியேற்றுக் கொண்ட பின் அவர் வேறு மாதிரி பேட்டியளித்ததால், அதன் அடிப்படையில் சுரேஷ் கோபி ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் இன்று (ஜூன் 10) மாத்ருபூமி மலையாள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“மத்திய அமைச்சரவையில் இருந்து இருந்து விலகுவது பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஏற்கனவே கமிட் செய்யப்பட்ட படங்களை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சினிமா என் விருப்பம் என்பது பிரதமருக்குத் தெரியும். ஏற்கனவே நான் ஒப்புக் கொண்ட படங்களை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான் ஏற்கனவே கமிட்டாகியுள்ள படங்கள் தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளதே தவிர ராஜினாமா செய்யும் திட்டம் எதுவும் இல்லை” என சுரேஷ் கோபி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் பலர் இந்த பதவி தமக்கு கிடைக்காதா என்று காத்திருந்து, அதற்காக பலத்த முயற்சிகள் செய்த நிலையில் சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்று நினைப்பது ஏன்?
இதுகுறித்து கேரள பத்திரிகையாளர்களிடம் கேட்டபோது,
“சுரேஷ் கோபி கேரள பாஜகவின் முதல் எம்.பி.யாக தேர்வானதை அவரே எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், அவர் தேர்தல் பிரச்சாரத்திலேயே, ’திருச்சூருக்கு ஒரு மத்திய அமைச்சர்… இது மோடி கேரன்ட்டி’ என்று சொல்லி பிரச்சாரம் செய்தார். நாம் எங்கே ஜெயிக்கப் போகிறோம் என்ற ’நம்பிக்கை’யில்தான் அவர் இப்படி பிரச்சாரம் செய்தார்.
சமீபத்திய நேர்காணலில் கூட, நடிகர் மம்முட்டி தயாரிக்கும் ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக தெரிவித்தார். ‘டேக் ஆஃப்’ படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ள இப்படத்தில் மம்முட்டி, ஃபஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
ஏப்ரலில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தாமதமானது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கினால் குறைந்தது நான்கு மாதங்கள் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நடிகர் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படத்திலும் சுரேஷ் கோபி நடிக்கிறார். 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்த பான்-இந்தியன் திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது.
இதுமட்டுமல்ல, ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படமான ‘சிந்தாமணி கொலகேஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் சுரேஷ் கோபி நடிக்கிறார்.
கோகுலம் கோபாலன் தயாரிக்கும் மேலும் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, நடிகர் சனல் வி தேவன் இயக்கிய ‘வராஹம்’ மற்றும் பிரவீன் நாராயணன் இயக்கத்தில் ‘கேஎஸ்கே’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.
இவ்வளவு பிசியாக இருக்கும் சுரேஷ் கோபி மத்திய இணையமைச்சர் பதவியில் அமர்ந்தால் தனது சினிமா நேரத்தை அரசியல் விழுங்கிவிடும் என்று கருதுகிறார். மேலும் சினிமா வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு கேபினட் அமைச்சராக கூட ஆகலாம், ஆனால் மத்திய இணை அமைச்சராவதற்கு எதற்காக சினிமாவை தியாகம் செய்ய வேண்டும் என்றும் அதிருப்தியில் இருக்கிறார் சுரேஷ் கோபி.
அதனால்தான் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ‘நான் முக்கிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் அமைச்சராகும் பட்சத்தில் அந்தப் படங்கள் நிறுத்தப்பட்டால், படக்குழுவினர் நெருக்கடிக்கு உள்ளாவார்கள்’ என்று கோபி பாஜக தலைவர்களிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவருக்கு நெருக்கமான பாஜகவினர், ‘இப்போது கிடைக்கும் அமைச்சர் பதவியை விட்டுவிட்டு படங்களில் நடிப்பது முட்டாள்தனம்’ என அறிவுரை கூறியுள்ளனர். அதனால்தான் ஜூன் 9 பிற்பகல் காலை 11.30 மணிக்குக் கிளம்பி டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.” என்றவர்கள் மேலும்,
“இது கேரளாவுக்கு மட்டுமான விவகாரம் இல்லை. மோடியின் மூன்றாவது அமைச்சரவை பதவியேற்பு விழா எவ்வளவு அவசரமாக நடத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு சுரேஷ் கோபி விவகாரம் ஒரு எடுத்துக் காட்டு. இவ்வளவு பிசியாக இருக்கும் நடிகர் சுரேஷ் கோபியுடன் முறையாக ஆலோசித்துதான் அவரை மத்திய இணை அமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தார்களா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது” என்கிறார்கள் கேரள பத்திரிகையாளர்கள்.
இவ்வாறு சுரேஷ் கோபி மீதான விவாதங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில், அவரே தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மோடி அரசின் அமைச்சர்கள் குழுவில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இது முற்றிலும் தவறானது. பிரதமர் மோடி தலைமையில்
கேரளாவின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
’ஈபிஎஸ் 5 நிமிடம் யோசித்தால் அதிமுகவிற்கு விடிவுகாலம்’ – புகழேந்தி பேட்டி!
மூன்றாவது முறையாக பிரதமர்… மோடி போட்ட முதல் கையெழுத்து என்ன?