வைஃபை ஆன் செய்ததும் அதிமுக மே 29 ஆம் தேதி தமிழ்நாடு முழுதும் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்த வாட்ஸ் அப், ‘இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை காணோமே? எடப்பாடிக்கு என்னாச்சு?” என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலையும் டைப் செய்யத் தொடங்கியது.
“திமுக அரசு கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த தவறியதை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு விவகாரங்களை கண்டித்தும் அதிமுக சார்பில் மே 29ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு கூட்டம் திரண்டதாக அரசுக்கு ரிப்போர்ட் சென்றிருக்கிறது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான் தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் வெற்றிகரமான ஆர்ப்பாட்டம் செய்யும் திறனை பெற்றிருக்கின்றன. இந்த வகையில் சில ஆண்டுகளாக அதிமுக கட்சி பிரச்சினைகளில் சிக்கி இருந்த நிலையில் எடப்பாடி பொதுச் செயலாளர் ஆன பிறகு வலிமையான போராட்டமாக மாநிலம் முழுவதும் இது முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்ட செயலாளர்கள் இல்லாத மாவட்டங்களில் கூட அங்கே அதிமுகவின் ஆர்ப்பாட்டம் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இதற்குக் காரணம் மாவட்டச் செயலாளர் பதவியை பெறுவதற்காக நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டத்தை திரட்டி இருக்கிறார்கள்.
ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லையே ஏன் என்பதுதான் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேச்சாக இருக்கிறது. சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வதாக இருந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சில தினங்களுக்கு முன்பே தான் ஆர்ப்பாட்டத்திற்கு வரவில்லை என்று சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவனிடம் தெரிவித்துவிட்டார் எடப்பாடி.
கடந்த நான்கு நாட்களாக சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் தான் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல் நிலையில் ஏற்பட்டிருக்கும் சிறு பிரச்சனைகளால் தான் அவர் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள் சேலத்து அதிமுகவினர்.

கடந்த இரண்டு வாரங்களாகவே எடப்பாடி பழனிச்சாமி தொடர் பயணங்களை மேற்கொண்டு வந்தார். அக்னி நட்சத்திரத்தில் அவர் மேற்கொண்ட பயணத்தால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. கை கால் வலியும் வயிற்று வலியும் ஏற்பட்டிருக்கிறது. சேலம் நெடுஞ்சாலை நகருக்கு சென்று எடப்பாடி பழனிசாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தொடர் அலைச்சலாலும், உடல் சூட்டாலும் தான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லி ஒரு வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர். இந்த காரணத்தால் தான் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் இருந்தும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்பாட்டம் நடத்திய அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி, திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்னமும் ஆர்ப்பாட்டம் நடக்காத நிலையில் சில நாட்களில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வார் என்கிறார்கள் அதிமுக உயர்மட்ட நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
இனி இலவச பார்க்கிங் இல்லை: மெட்ரோ நிர்வாகம்!
மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர்கள் 5 நாட்கள் கெடு!