எட்டு வழிச்சாலையை எதிர்க்கவில்லை : டெல்லியில் மீண்டும் எ.வ.வேலு

அரசியல்

எட்டு வழிச்சாலையை திமுக எதிர்க்கவில்லை என்று டெல்லியில் தமிழக அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்தார்.

டெல்லி சென்றுள்ள பொதுப்பணித்துறை,நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ சிறு துறைமுகங்கள்‌துறை அமைச்சர்‌ எ.வ.வேலு கெளடில்யா மார்க்கில்‌ உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தை அகற்றிவிட்டு புதிய தமிழ்நாடு இல்லம்‌ கட்டுவதற்கான பணிகள்‌ குறித்து நேற்று (ஜனவரி 3) ஆய்வு கூட்டம்‌ நடத்தினார்‌.

இந்நிலையில் இன்று (ஜனவரி 4) அமைச்சர் எ.வ.வேலுவும், திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா இருவரும் ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்துப் பேசினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, “தமிழ்நாட்டில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை பணிகள் பல்வேறு நிலைகளில் காலதாமதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் எங்களிடம் சொன்னார்.

ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருக்கிறோம்.

தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டுக்கு உயர்மட்ட சாலையை விரைந்து அமைக்கக் கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை சாலைகள் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

Not opposed to eight lane highway EV Velu in Delhi

இந்நிலையில் செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரை சாலையை 8 வழி சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

திருச்சி துவாக்குடி உயர்மட்ட சாலை, ஸ்ரீபெரும்புதூர் முதல் பூந்தமல்லி, மாதவரம் ஆகிய பகுதிகளில் உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
அதுபோன்று கப்பலூர், கிருஷ்ணகிரியில் நகரப் பகுதிகளில் சுங்கச்சாவடிகள் இருக்கிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கோ, எஸ்.பி.அலுவலகத்துக்கோ, மருத்துவ கல்லூரிக்கோ செல்ல வேண்டும் என்றால் நகரப்பகுதியில் இருக்கும் கிருஷ்ணகிரி சுங்கசாவடியை கடந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது.

எனவே இதனை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதையும் ஒன்றிய அமைச்சரிடம் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். இதை கேட்ட அவர் மாற்று வழி ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழு விரைவில் ஆய்வு செய்யும் என்று கூறியிருக்கிறார்.

அதேபோன்று ஒப்பந்த காலம் முடிந்த 40 சதவிகித சுங்கச்சாவடிகளை குறைத்து கொள்கிறோம் என்று ஒன்றிய அமைச்சர், எம்.பி.வில்சனிடம் சொல்லியிருக்கிறார். அதுதொடர்பாகவும் பேசினோம். அதுகுறித்து கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

சேலம் – உளுந்தூர்பேட்டை சாலைகளில் சில இடங்களில் 4 வழி சாலையாகவும், சில இடங்களில் இரு வழிசாலையாகவும் இருக்கிறது. 8 இடங்களில் பை-பாஸ் போட வேண்டிய நிலை இருக்கிறது. இப்படி தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து பேசினோம்” என்றார்.

சேலம் 8 வழிச்சாலையை எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக கடுமையாக எதிர்த்தது, தற்போது திமுக தனது நிலையை மாற்றியிருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய எ.வ.வேலு, “தீவிரமாக எதிர்த்தோம் என்று சொல்வது உங்களுடைய கூற்று. சாலை போடுவதற்கு எப்போதும் திமுக எதிர்ப்புத் தெரிவிக்காது. சாலை போடுவது என்பது மக்களுக்கு அத்தியாவசியமானது.

ஆனால் பிரச்சினை பூதாகரமான நிலையில், விவசாயிகளை அழைத்து பேசி பிரச்சினைகளை தீர்த்துவிட்டு சாலை போடுங்கள். அல்லது மாற்று வழி காணுங்கள் என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது முதல்வர் சொன்னார்.

இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்னதாகத்தான் மறுசீராய்வு மனுக்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டன.

தேர்தல் சமயத்தில் எங்கள் கூட்டணியிலிருந்தவர்கள், 8 வழிசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதை இல்லை என மறுக்க நான் தயாராக இல்லை.
இப்படிப்பட்ட நிலையில் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.

ஒன்றிய அரசு சாலை போட வேண்டும் என்று சொல்கிற போது கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதற்குப் பதில் சொல்ல முடியும்.

ஏற்கனவே இதைத்தான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். இது கொள்கை முடிவுதான்.

கூட்டணிக் கட்சிகள் ஒரு கருத்தைச் சொல்லும் போது அவர்களோடு நாங்கள் இருக்கிறோம். அதை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் பேசுகிற போது சாலையைப் போடக் கூடாது என்று சொல்ல முடியாது.

அப்படிப் பார்த்தால் நாங்கள் பல இடங்களில் சாலை போடுகிறோம், சாலைகளை விரிவுபடுத்துகிறோம். ஆனால் நேரடியாக எதிர்த்தோம் என்பது கிடையாது.
கூட்டணிக் கட்சிகளோடு கொள்கை முடிவு குறித்துக் கலந்து பேசப்படும்” என்றார்.

பிரியா

பிகினிங் படத்தை வெளியிடும் லிங்குசாமி

நீ என்ன பெரிய ஆளா? டிவி சேனல்னா பயப்படனுமா? – செய்தியாளரை மிரட்டிய அண்ணாமலை

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *