குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே, வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது. அதைக் கண்டு நீங்கள் அலறப் போகிறீர்கள் என தமிழிசை சவுந்தராஜன் இன்று (நவம்பர் 7) தெரிவித்துள்ளார்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமைப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
குளத்தில்கூட தாமரை மலரக்கூடாது!
இதற்காக அங்கு அமைக்கப்பட்டு வரும் நடைபாதை, விளையாட்டுத் திடல், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, உடற்பயிற்சி கூடம், வாகன நிறுத்துமிடம், கழிவறை உள்ளிட்ட வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அதிகாரிகளுடன் சென்று நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, பூங்கா அருகில் உள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப் பூக்களை கண்ட அமைச்சர் சேகர்பாபு, ’குளத்தில்கூட தாமரை மலரக்கூடாது’ எனக் கிண்டலாக கூறி, அவற்றை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் பாஜக தரப்பில் அக்கட்சியின் மூத்த தலைவரான தமிழிசை சவுந்தரராஜன், சேகர்பாபுவுக்கு பதிலளித்து இன்று ட்விட் செய்துள்ளார்.
தாமரை அரசமைக்கும் காலத்தை பார்ப்பீர்கள்!
அதில், “அரசு அமைக்கும் பூங்காவில்.. குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.. என ஆவேசப்பட்டு இருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர் பாபு… குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே, வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்.
அரசுஅமைக்கும் பூங்காவிலேயே தாமரை வேண்டாம் என் ஆவேசப்படும் நீங்கள், தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள். நீங்கள் காலம் காலமாக கூவத்தை சுத்தம் செய்வோம் என மக்களை ஏமாற்றுவது மாற்றி கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள்..
இது வெறும் சத்தமல்ல சத்தியம் சாத்தியம். இலட்சியப் பற்றுள்ள தொண்டர்களாலும் லட்சக்கணக்கில் சேர்ந்த புதிய உறுப்பினர்களாலும் இது சாத்தியம் என்பது சத்தியம்” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நீங்கள் இருவரும் இந்துக்கள், குழந்தைக்கு இப்படி பெயர் வைக்கலாமா? தீபிகா மீது பாய்ந்த நெட்டிசன்கள்
அதிபராகும் டொனால்ட் டிரம்ப்… சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?