not going to discuss about neet exam

”நீட் தேர்வு குறித்து பேசப்போவதில்லை”: டி.ஆர்.பாலு

அரசியல்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசுவதற்கு முதன்மையான விஷயங்கள் நிறைய இருப்பதால் நீட் தேர்வு குறித்து பேசப்போவதில்லை என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

நாளை முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ள நிலையில் இன்று (ஜூலை 19) நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் அல்லது டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைக்கின்ற வகையில் அவை நடவடிக்கைகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற குழு தலைவர்களுக்கும் நாளை நோட்டீஸ் கொடுக்க உள்ளோம்.

நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற விலைவாசி உயர்வை குறைப்பதற்கு பிரதமரோ அவரை சுற்றியிருக்கின்ற அமைச்சர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு இந்தியாவின் அரசியல் தலைவர்களை குறைவாக மதிப்பிட்டு பேசும் நிலையில் இருக்கின்றார்கள். ஆனால் விலைவாசி உயர்வால் இந்த நாடு மோசமான பொருளாதார சீர்கேடுக்கு தள்ளப்பட்டு வருகிறது என்பதை பற்றி பேச வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளோம்.

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, வீட்டிற்கு 15 லட்சம் என்று 9 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த தேர்தல் அறிக்கையை மத்திய அரசு செயல்படுத்தாததை சுட்டிக் காட்ட உள்ளோம்.

பொது சிவில் சட்டம் கொண்டு வர மாட்டோம் என்று மத்திய அரசு கூறுவதை நாங்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லையென்றால் அடுத்த கூட்டத்தில் கொண்டு வருவார்கள். எனவே இது குறித்து பேச உள்ளோம்.
ஓடிசா ரயில் விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து பேச உள்ளோம். மாநிலத்தில் அதிகாரிகளை நியமிப்பதற்கு துறை சார்ந்த அமைச்சர்களுக்கோ, தலைமை செயலாளருக்கோ தான் அதிகாரம் உண்டு. ஆனால் டெல்லியில் அந்த அதிகாரத்தை பறிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்தும் விரிவாக பேச உள்ளோம்.

மணிப்பூர் கலவரம் தொடர்பான விஷயங்களை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை தட்டிக் கேட்பதற்காக நோட்டீஸ் கொடுக்க உள்ளோம். பல்வேறு நாடுகளுக்கு சென்று உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும் பிரதமர் தன்னுடைய கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலமான மணிப்பூருக்கு இதுவரை செல்லாதது கண்டனத்திற்குரியது.

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கின்ற மாநிலங்களில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகளை மிரட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது இப்போது தமிழ்நாட்டிலும் ஆரம்பித்து விட்டது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தவறு செய்தால் தண்டனை கொடுப்பதில் தவறில்லை. ஆனால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துகின்றார்கள். இது குறித்தும் விவாதிக்க உள்ளோம்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் 17 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 31 சட்ட மசோதாக்கள் குறித்து விவாதிக்க வேண்டும். இதற்கெல்லாம் 17 நாட்கள் போதுமா? கண் துடைப்பிற்காக ஒரு கூட்டத்தை நடத்துகிறார்கள்.

நீட் தேர்வு குறித்து பேசப்போவதில்லை. உயிர் வாழ்வதற்குத் தேவையான காய்கறி ரூ.300 வரை விற்பனையாகிறது. ஆகையால் முதன்மையான விஷயங்களை தான் பேச உள்ளோம். 2024-ல் பாஜக ஆட்சி முற்றிலும் ஒழிக்கப்படும் என்பதில் மாற்றமே கிடையாது”  என்று கூறினார் டி.ஆர்.பாலு.

மோனிஷா

“தமிழக அரசுக்கு அதிகாரமில்லை” : ஆன்லைன் கேம் வழக்கில் மத்திய அரசு!

மோடியாவது EDயாவது?: அட்ரஸை தரேன் ரெய்டுக்கு வாங்க: உதயநிதி பேச்சு!

ED ரெய்டுக்கெல்லாம் அஞ்சப்போவதில்லை: மு.க.ஸ்டாலின்

+1
0
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0