அண்ணியாக இல்லாமல் அன்னையாக 40 தொகுதி வேட்பாளர்களுக்கு சேர்த்து தான் பிரச்சாரம் செய்து வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சென்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதன்படி தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான நாராயண சாமியை ஆதரித்து பெரியகுளத்தில் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஏப்ரல் 13) மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர், “கேப்டன் விஜயகாந்த், அவரது கேப்டன் பிரபாகரன் படம் உட்பட ஏராளமான திரைப்படங்களுக்காக தேனியில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார்.
விஜயகாந்த் நம்மை விட்டு எங்குமே போகவில்லை. ஒரு தெய்வமாக இருந்து நம் அனைவரையும் வழி நடத்தி வருகிறார். அவர் தான் சம்பாதித்த பணத்தில் அனைவருக்கும் அன்னதானம் செய்தார். அதன் காரணமாகத்தான் அவர் துயிலும் கேப்டன் கோவிலில் இன்றும் நாள்தோறும் சுமார் 2, 000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
கணவனை இழந்த ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பது பெண்களான அனைவருக்கும் தெரியும். விஜயகாந்த்தும் நானும் எப்படியெல்லாம் வாழ்ந்தோம் என்பது தேமுதிக தொண்டர்களுக்கும் பெண்களுக்கும் தெரியும்.
இருந்த போதும் கேப்டன் இழப்பை மனதில் வைத்துக் கொண்டே, துக்கம் வேதனை இருந்தாலும் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சென்று இரட்டை இலை மற்றும் முரசு சின்னத்திற்காக வாக்கு சேகரித்து வருகிறேன்.
ஜெயலலிதா இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும், கேப்டன் இல்லாமல் நானும் சந்திக்கும் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்.
எனது மகனுக்காக ஒருநாள் கூட பிரச்சாரம் செய்யவில்லை!
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் எனது மகன் விஜய பிரபாகரனுக்காக நான் ஒரு நாள் கூட பிரச்சாரம் செய்யவில்லை. ‘ஏன் உங்கள் மகனுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்யவில்லை?’ என கேட்கிறார்கள்.
விஜயபிரபாகரன் எனக்கு மட்டும் மகன் அல்ல நான் பொது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் எனக்கு சகோதர சகோதரிகள் தான், எனது மகன்கள் மாதிரி தான்.
உங்கள் அண்ணியாக இல்லாமல் அன்னையாக 40 தொகுதி வேட்பாளர்களுக்கு சேர்த்து நான் பிரச்சாரம் செய்து வருகிறேன்.
போகும் இடமெல்லாம் அதிமுக கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக இருப்பதை நான் காண்கிறேன். இந்த கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான வரவேற்பு இருக்கிறது என்பது நிச்சயம்“ என்று பிரமேலதா தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”அண்ணாமலை நகைச்சுவையாக மாறிவிட்டார்” : செல்லூர் ராஜூ விமர்சனம்!
Video: ‘அப்படி’ பைக் ஓட்டியதால் வந்த சர்ச்சை… குக் வித் கோமாளி பிரபலம் விளக்கம்..!