காங்கிரசுக்கு ஒரு சீட் கூட தர மாட்டேன் என்று கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரு நிபந்தனையும் விதித்துள்ளார். Mamata conditions to Congress
இந்தியா கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்து தான் போட்டியிடும். காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இது இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மம்தா பானர்ஜி இல்லாத கூட்டணியை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 31)மேற்கு வங்காள மாநிலம் மால்டா பகுதியில் பேசிய மம்தா பானர்ஜி,
“தனது கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பினால், காங்கிரஸ் கட்சி சிபிஎம் கட்சியிடம் இருந்து விலகி வர வேண்டும்” என்று நிபந்தனை விதித்துள்ளார்.
இது குறித்து அவர், “கடந்த காலங்களில் சிபிஎம் கட்சியினர் என்னை பலமுறை உடல்ரீதியாக தாக்கியுள்ளனர்.
நான் இரக்கமின்றி தாக்கப்பட்டிருக்கிறேன், என் நலம் விரும்பிகளால் தான் இன்று உயிருடன் இருக்கிறேன். சிபிஎம் கட்சியை மன்னிக்கவே முடியாது.
சிபிஎம்முடன் இருப்பவர்கள் பாஜகவில் கூட இருக்கலாம். நான் அவர்களை மன்னிக்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்பாக பேசியவர், “சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை. இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் இரு சீட் தருவதாக கூறினேன். காங்கிரஸ் வேட்பாளர் இருவரும் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் என்று தெரிவித்தேன்.
ஆனால் அவர்கள் அதிக இடம் கேட்டார்கள். எனவே நான் அவர்களிடம் சிபிஎம் கட்சியிலிருந்து விலகி வரும் வரை ஒரு சீட் கூட தரமாட்டேன் என்று தெரிவித்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரை பீகாரைத் தொடர்ந்து மீண்டும் மேற்கு வங்கத்தில் நுழைந்திருக்கும் நிலையில் இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் இணைந்து மதச்சார்பற்ற கட்சிகள் பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரசுக்கு எதிராக போராடும் என்று சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தொடர் நெகட்டிவ் விமர்சனம்: மோகன் லால் படத்திற்கு மஞ்சு வாரியர் ஆதரவு!
மாதவன், நயன்தாராவின் டெஸ்ட் ஷூட்டிங் ஓவர்!
Mamata conditions to Congress