வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் சூழ்ச்சி : முதல்வர்!

அரசியல்

வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் சூழ்ச்சி நடந்திருப்பதாக முதல்வர் மு.கஸ்டாலின் கூறியுள்ளார்.

பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாகப் போலி வீடியோக்கள் வைரலாகின. இது போலி வீடியோக்கள் என்று தமிழக போலீசாரும், பீகார் போலீசாரும் தெரிவித்தனர். பீகாரைச் சேர்ந்த அமன் குமார் உள்ளிட்டோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 9 ) வெளியிடப்பட்ட உங்களில் ஒருவன் கேள்வி பதில் தொடரில் வடமாநிலத்தவர்கள் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காலம் காலமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு இருந்தது இல்லை. கடந்த சில ஆண்டுகளாக வேலை தேடி ஏராளமானவர்கள் வருகிறார்கள்.

இவர்களுக்குத் தமிழ்நாட்டில் எந்த ஊரிலும், எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் சிலர் பொய்யான வீடியோக்களைத் தயாரித்து பொய்யைப் பரப்பி இருக்கிறார்கள். வடமாநிலங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளே இதைச் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதுதான்.

பாஜகவுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை நான் எடுத்துக்கூறிய மறுநாளே, இப்படிப்பட்ட பொய் பரப்பப்பட்டதைக் கவனித்தீர்கள் என்றாலே, இதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும்.

இந்தச் செய்தி கிடைத்ததும், உடனே எங்காவது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று விசாரித்தேன். எந்த இடத்திலும் சிறு தொல்லைகூட ஏற்படவில்லை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரிடமும் தெரிவித்திருக்கிறேன்.

தமிழ்நாடு டிஜிபி உரிய விளக்கம் அளித்திருக்கிறார். பீகார் அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்து முழுத் திருப்தியோடு சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்றுதான் எல்லோரும் சொல்வார்கள்.

தமிழ்நாடும் – தமிழர்களும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிறவர்கள். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ – ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ போன்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள். இது இங்கிருக்கும் வட மாநிலச் சகோதரர்களுக்கும் நன்றாகவே தெரியும் என்று கூறியுள்ளார்.

பிரியா

எதிர்க்கட்சிகளை வெளிப்படையாகவே பாஜக மிரட்டுகிறது: மு.க.ஸ்டாலின்

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *