மாநாட்டில் புளிசோறு… மாநாட்டு ‘வெற்றிக்கு’ கறிசோறு!
அதிமுக மாநாடு வெற்றி பெற்றதால் மாநாட்டிற்காக உழைத்த நிர்வாகிகளுக்கு நெல்லை மாவட்டச் செயலாளர் கறி விருந்தளித்தார்.
கடந்த மாதம் 20ஆம் தேதி மதுரையில் பொன்விழா எழுச்சி மாநாடு மிக சிறப்பாக இந்திய அரசியல் வட்டாரத்தில் திரும்பி பார்க்கக் கூடிய அளவில் வெற்றி மாநாடாக நடைபெற்றது.
ஆனால் அதிமுக மாநாட்டில் குவியல் குவியலாக புளிசாதம் கொட்டப்பட்ட விவகாரம் விமர்சனத்துக்கு உள்ளானது. மாநாட்டிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்பதால் முன்கூட்டியே அதிக உணவு சமைக்கப்பட்டதால் தான் உணவு வீணானது என அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மாநாட்டு வெற்றிக்காக உழைத்த அதிமுக நிர்வாகிகளுக்கு நெல்லையில் கறி விருந்து அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மதுரை மாநாட்டிற்காக உழைத்தவர்களை பாராட்டும் விதமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா அனைவரையும் அழைத்து கறி விருந்து தயார் செய்து தானே தொண்டர்களுக்கு பரிமாறி மகிழ்ச்சி அடைந்தார்.
இந்த விருந்தில் 2000-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பொன்விழா எழுச்சி மாநாட்டிற்காக நெல்லையிலிருந்து முன்னாள் அரசு வழக்கறிஞர் அன்பு என்ற அங்கப்பன் தலைமையில் மாநாட்டு ஜோதியை எடுத்துச் சென்ற 25 தொண்டர்களுக்கும் மாவட்டச் செயலாளர் தச்சை- கணேசராஜா பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
சரவணன்
”ஹலோ மிஸ்டர்”: இளைஞரின் கேள்வியால் டென்ஷனான ஆட்சியர்
ஆ.ராசா, உதயநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு!