கர்நாடக தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஓபிஎஸ் அணி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசன் போட்டியிடுவார் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஓபிஎஸ் அணி 3 இடங்களில் போட்டியிடுவதாக வேட்பாளர்களை அறிவித்தது.
புலிகேசிநகர் தொகுதியில் கர்நாடக மாநில மாணவர் அணிச் செயலாளர் எம்.நெடுஞ்செழியன், கோலார் தங்கவயல் தொகுதியில் கர்நாடக மாநில கழகத் தலைவர் அனந்தராஜ், காந்திநகர் சட்டமன்றத் தொகுதியில் கர்நாடக மாநில கழகச் செயலாளர் கே.குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்தியத் தேர்தல் ஆணையம் கர்நாடக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய கடிதத்தில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு ஒதுக்குமாறு கூறியிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம், ஈரோடு கிழக்கில் வேட்பாளரை திரும்ப பெற்றது போல் கர்நாடக தேர்தலிலும் திரும்பபெறுவீர்களா?, போட்டியிட்டால் எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, “சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுக்கப்படும்” என்று பதிலளித்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது வேட்புமனுவில் ஒரு இடத்தில் கையெழுத்திடவில்லை என கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று கோலார் தங்கவயல் வேட்பாளர் ஆனந்த்ராஜ் மனுவில் தவறுகள் இருந்ததாக நிராகரிக்கப்பட்டுள்ளது. காந்திநகர் வேட்பாளர் குமாரின் மனு ஏற்கப்பட்டதா இல்லையா என இன்னும் தெரியவரவில்லை.
அதேசமயம், அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
பிரியா
சென்னை vs ஹைதராபாத்: வெற்றி யாருக்கு?
12 மணி நேர பணி வேலை: திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு!