பாஜகவின் முடிவுக்காக அதிமுக காத்திருப்பது பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனை முன்னிட்டு திமுக கூட்டணி, நாம் தமிழர், அமமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
ஆனால் முக்கிய எதிர்கட்சியான அதிமுக இதுவரை வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திணறி வருகிறது. கூட்டணியில் இருக்கும் பாஜக தனித்து போட்டியிடுமா? எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் யாருக்கு ஆதரவு தரும்? என்பதிலும் இன்னும் தெளிவான நிலை ஏற்படவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பாஜக துணைத்தலைவர் நாராயண் திருப்பதி பேசுகையில், ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜகவில் இருந்தே நிறைய நபர்கள் வாய்ப்பு கேட்கிறார்கள். ஆனால், அனைத்தும் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து தான் முடிவெடுக்க முடியும்.
மேலும், ஓபிஎஸ் இபிஎஸ் என பலரும் கலந்து ஆலோசித்து உள்ளனர். எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும். அது பற்றி கவலை இல்லை.
இரட்டை இலை தொடர்பான வழக்கிற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவின் நிலைப்பாடு இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10ல் இருந்து வெளியேறிய அதானி
திருமண நாள்: விஜயகாந்த்தை நேரில் வாழ்த்திய எஸ்.ஏ.சி