டெல்லியில் இருந்து சொன்னாலும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று (ஜூலை 1) தெரித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. எனினும் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இடையேயான தலைமை யுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இருவரும் தனித்தனியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், பன்னீர் அணியின் ஆலோசகருமான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமைத் தாங்கினார்.
அப்போது, அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ’நமது அம்மா’ நாளேடு போன்று, ’நம் புரட்சி தொண்டன்’ என்ற தினசரி நாளிதழை தொடங்க உள்ளதாக இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்த உள்ளார். அவருக்கு போட்டியாக கொங்கு மண்டலத்தில் மிகப்பிரமாண்டமான அளவில் மாநாடு ஒன்றை நடத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமியுடன் இணைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. டெல்லியில் இருந்து சொன்னாலும் நாங்கள் கேட்கமாட்டோம்” என்றார்.
மேலும் ”அதிமுக பாஜகவுடன் தோழர்களாக இருக்கலாம். தொண்டர்களாக இருக்க முடியாது” என்று ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
மாமன்னன்: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு : நீதிமன்றத்தில் மனு!