மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மழை சேதத்தைப் பார்வையிடச் சென்ற அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் தமிழ்நாட்டு அரசியலில் புயலைக் கிளப்ப வைத்திருக்கிறார்.
இன்று (நவம்பர் 16) மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சென்னை வந்த அமித் ஷா தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்காக வந்ததால் அவரை சந்திக்கவில்லை. அவர்கள் எப்போது வந்தாலும் சென்று சந்திக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
அடுத்து மெகா கூட்டணி பற்றி பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தலைமையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமையும். அதில் டிடிவி தினகரன் இடம்பெற 1% கூட வாய்ப்பில்லை” என்று அடித்துக் கூறியிருக்கிறார்.

பன்னீரை மட்டுமே கடுமையாக விமர்சித்து வந்த எடப்பாடி பழனிசாமி சமீப காலமாக டிடிவி தினகரனை விமர்சிப்பதை சற்று குறைத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அதிமுக தலைமையில் அமையப் போகும் கூட்டணியில் டிடிவி தினகரன் இடம்பெற 1% கூட வாய்ப்பில்லை என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இதன் பின்னணி குறித்து அதிமுகவின் எடப்பாடி வட்டாரத்தில் விசாரணை வலையை விரித்தோம். சில தகவல் மீன்கள் வந்து விழுந்தன.
“எடப்பாடி பழனிசாமி சமீபமாக பன்னீரை டார்கெட் செய்வதைத்தான் முக்கிய நோக்கமாக வைத்திருக்கிறார். ஜூலை 11 பொதுக் குழுவில் இருந்து பன்னீர் செல்வத்தை மிகக் கடுமையான வார்த்தைகளால், தான் விமர்சித்ததோடு அதிமுகவின் முன்னணித் தலைவர்களையும் பன்னீரை நோக்கி பாய்ச்சல் நடத்தும்படி கட்டளையிட்டார் எடப்பாடி. அதன்படியே அவர்களும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் கடந்த ஒரு மாதமாகவே, ‘திமுகவை வீழ்த்த அதிமுகவோடு கூட்டணி வைக்கத் தயார்’ என்று டிடிவி தினகரன் வெளிப்படையாக அறிவித்தார். மேலும் பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளையும் டிடிவி வெளிப்படுத்தி வந்தார். அதாவது, ‘பாஜகவை காட்டி திமுக பயமுறுத்துகிறது. பிஜேபி ஆட்சிக்கு வந்து ஏழெட்டு வருஷமாச்சு. நாம பயப்படும்படியா என்ன பண்ணிட்டாங்க? மைனாரிட்டி ஓட்டுகளை வாங்குவதற்காக திமுக பாஜகவை காட்டி பயமுறுத்துகிறது’ என்று கூறிவந்தார் தினகரன்.
சில மாதங்களாகவே பாஜக தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார் டிடிவி தினகரன். குறிப்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோடு சுமுகமான தகவல் தொடர்பில் டிடிவி தினகரன் இருப்பதாக அமமுக, பாஜக இரு தரப்பிலும் சொல்கிறார்கள். ஏற்கனவே 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவின் உள் ஒதுக்கீட்டுக் கூட்டணியில் தினகரனை சேர்க்க வலியுறுத்தியது பாஜக. ஆனால் எடப்பாடி அதை மறுத்துவிட்டார்.

இப்போது அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி… கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி டெல்லி சென்று தொழிபதிபர் ஜெயின் என்பவர் மூலமாக கடும் முயற்சி செய்து அமித் ஷாவை சந்தித்தார். அப்போதே, ‘அதிமுகவுல எல்லாரும் ஒண்ணா வாங்க’ என்றுதான் சொல்லியனுப்பினார் அமித் ஷா. இதை எடப்பாடி ரசிக்கவில்லை.
இந்த நிலையில்தான் டிடிவி தினகரன் பாஜகவோடு நெருங்கி அதிமுக கூட்டணியில் இடம்பெற முயற்சிக்கும் தகவல் பற்றி தனக்கு நெருக்கமான தங்கமணி உள்ளிட்டோரோடு பேசியுள்ளார் எடப்பாடி.
அப்போது தங்கமணி, ‘பன்னீரை வைத்திருப்பதில் கூட ஒரு வகையில் பிரச்சினையில்லை. ஆனால் டிடிவி தினகரனை நாம கூட்டணியில் சேர்த்தால், மெல்ல மெல்ல அதிமுகவை கபளீகரம் செய்துவிடுவார். அதனால் தினகரன் அப்படின்ற பேச்சே நமக்கு வேணாம்’ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான் அதிமுகவின் மெகா கூட்டணியில் தினகரனுக்கு 1% கூட இடமில்லை என்று பேசியிருக்கிறார் எடப்பாடி. இதன் மூலம் பாஜகவுக்கு தெளிவான ஒரு பதிலை கொடுத்திருக்கிறார் எடப்பாடி. அதாவது அதிமுக என்ற கட்சிக்குள்ளோ, அதிமுகவின் கூட்டணிக்குள்ளோ பாஜக எந்த பங்கையும் செலுத்த முடியாது என்பதுதான் அவரது பதில்” என்கிறார்கள்.

எடப்பாடியின் இந்த பேட்டி குறித்து தினகரனுக்கு நெருக்கமான அமமுக புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.
“கடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் 506 இடங்களில் போட்டியிட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு அங்கீகாரம் கொடுக்க முடியாமல் அதாவது பி பார்ம் கூட கொடுக்க முடியாமல் தேர்தலிலேயே போட்டியிடவில்லை அதிமுக. பன்னீருக்கும் எடப்பாடிக்கும் பிரச்சினை ஏற்பட்டதால் எடப்பாடியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அதிமுகவில் நிர்வாக ரீதியாக தேர்தல் ஆணையத்தின் பார்வையில் இதே நிலைதான் நீடிக்கிறது. அந்த கட்சியில் எடப்பாடிக்கு இவ்வளவுதான் அதிகாரம். எனவே கூட்டணி பற்றி எடப்பாடி சொல்வதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையே இப்போது எழ வில்லை” என்கிறார்கள்.
-வேந்தன்
இனி இந்த இயக்கம்தான்…வைரமுத்து புது ரூட்!
சபரிமலை நடைத் திறப்பு: தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள்