மக்களையும், காவல்துறையினரையும் பாதுகாக்காமல் கும்பகர்ண தூக்கத்தில் இருந்தால், திமுக அரசை விழித்தெழ வைக்கும் போராட்டத்தில் அதிமுக இறங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
கடந்த 28 ஆம் தேதி கடலூர் மத்திய சிறை உதவி அலுவலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. விசாரணையில், சிறையில் இருக்கும் எண்ணூரைச் சேர்ந்த தனசேகரன் என்ற குற்றவாளி, கஞ்சா மற்றும் செல்போன் பயன்படுத்திய புகாரில் அவரை மணிகண்டன் தட்டிக்கேட்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்து நேரடியாகவே மிரட்டல் விடுத்த தனசேகரன், தனது ஆட்கள் மூலம் பெட்ரோல் குண்டை வீசச் செய்திருக்கிறார் என்று போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.
இதுகுறித்து சிறையில் இருந்தபடியே சிறை அதிகாரிக்கு ஸ்கெட்ச் போட்ட ரவுடி? மயிரிழையில் தப்பித்த குடும்பம் என்ற தலைப்பில் ஆகஸ்டு 29 ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், இதுபோன்ற குற்றச்செயல்களை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்டு 30) அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
“சிறைச்சாலை என்பது குற்றம் புரிந்தவர்களை பக்குவப்படுத்தி சீர்திருத்தும் இடம். அந்த இடத்தில், தண்டனை பெற்ற கைதிகளுக்கு செல்போன்கள், பேட்டரிகள், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் போன்றவை எப்படி கிடைக்கிறது என்றே தெரியவில்லை.
சென்னை, எண்ணூரைச் சேர்ந்த ரவுடி, வழக்கு ஒன்றில் சிக்கி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சிறையின் உதவி ஜெயிலர், ஜெயிலில் திடீர் சோதனை நடத்தும்போது, மேலே குறிப்பிடப்பட்ட கைதியிடமிருந்து செல்போன்கள் மற்றும் பேட்டரிகளை பறிமுதல் செய்திருக்கிறார் என்றும், இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கைதி, உதவி ஜெயிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 27.8.2022 அன்று கடலூர் சிறை வளாகத்திற்கு அருகில், காவலர் பாதுகாப்புடன் கூடிய காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள உதவி ஜெயிலர் வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுவீசி எரித்திருக்கிறார்கள். உதவி ஜெயிலர் வெளியூர் சென்றிருந்ததாலும், அவருடைய குடும்பத்தினர் வேறு ஒரு அறையில் இருந்ததாலும் உயிர் தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதே போன்று, தமிழகத்திலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன், போதைப் பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை தாராளமாகக் கிடைப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நேர்மையான முறையில் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரியை அச்சமூட்டும் வகையில், அவரது வீடு தாக்கப்படும் சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இதேபோன்று கடந்த 28.8.2022 அன்று மதுரை மத்திய சிறையில், கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த ஆட்சியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை, சிறையில் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பில்லை, கைதிகளை திருத்தப் போராடும் நேர்மையான காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை” என்று குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி மேலும்,
“அதே நேரம், சமூக விரோதிகள் சகல வசதிகளுடன் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் ராஜநடை போடுகிறார்கள். கடந்த 10 ஆண்டு கால அம்மாவின் ஆட்சியில், பொதுமக்களும், குறிப்பாக பெண்களும் பாதுகாப்போடு இருந்ததை இப்போது உணர்கிறார்கள். தற்போது, பட்டப்பகலில் கூட வீதிகளில் நடமாட முடியாமல் மக்கள் அச்சப்படுகிறார்கள். தங்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருப்பதால் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சி நடுங்குகிறார்கள்,
அம்மா ஆட்சியில் அமைதிப் பூங்காவாய்த் திகழ்ந்த தமிழகம், இன்றைய தி.மு.க. ஆட்சியில் அழிவுப் பாதைக்கே சென்று விட்டது. முதலமைச்சரின் காதுகளில், அவரை பாராட்டுபவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதால், மக்களின் ஓலங்கள் கேட்கவில்லையோ? மக்களைக் காக்க திறமையில்லாமல், பாதுகாக்கும் பணியில் உள்ள காவலர்களையும் காக்கத்தவறிய இந்த ஆட்சியாளர்கள், கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்தெழ வேண்டும். இல்லையென்றால், தி.மு.க. அரசை விழித்தெழ வைக்கும் அறப்போரில் அ.தி.மு.க. ஈடுபடும் என்று எச்சரிக்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கலை.ரா
விலைவாசி உயர்வு- போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!