ஸ்டாலின் என்ற எனது பெயரை மாற்றினால்தான் பள்ளிகளில் சேர்த்துக் கொள்வோம் என்று பல பள்ளிகளில் சொல்லியிருக்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை, சேத்துப்பட்டு, சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில், முன்னாள் மாணவர்கள் சங்கக் கூடுகை 2022 நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர்,
“தமிழாசிரியர் ஜெயராமன் என்னை மாணவனாக பெற்றதில் பெருமை அடைவதாக கூறினார். அதுபோல தமிழ் பாடத்தை கற்கும் வாய்ப்பை அவரிடம் பெற்றதில் நான் பெருமை அடைகிறேன்.
எனக்கு தமிழை அடித்து அடித்து சொல்லி கொடுத்தவர் ஆசிரியர் ஜெயராமன். முதலமைச்சராக இல்லாமல் மாணவனாக, பழைய நண்பனாக இங்கு வந்துள்ளேன் .
இன்று பள்ளிக்கு வர போகிறேன் என்பதால் நேற்றிரவு மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை. வழக்கமாக 2 அல்லது 3 மணிக்குதான் தூங்குவேன். அந்த தூக்கமும் நேற்று வரவில்லை . மாணவப் பருவம் என்பது திரும்ப கிடைக்காத காலம் .
பள்ளியில் சேர்ந்தபோது என் தந்தை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். ஆனாலும் நான் பந்தாவாக நடந்து கொள்ளவில்லை. அதைத்தான் என் தந்தையும் விரும்பினார்.
கோபாலபுரத்தில் உள்ள எனது இல்லத்திலிருந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வரை நடந்து வந்து 29c பேருந்திலும் , சில நேரம் சைக்கிளிலும் பள்ளிக்கு வந்துள்ளேன்.
பேருந்திலிருந்து இறங்கி ஸ்டெர்லிங் சாலையில் இருந்து பள்ளிக் கூடம் வரை நடந்தே வருவேன். அப்படி நடந்து வர பல காரணம் உண்டு. இப்போது அதை எல்லாம் செல்ல முடியாது. அதெல்லாம் பழைய நினைவுகள்.
பாதுகாப்பு காவலர்கள் ஒப்புக் கொண்டிருந்தால் மிதிவண்டி அல்லது பேருந்திலேயே இன்றும் பள்ளிக்கு வந்திருப்பேன் .
ஆசிரியர் ஜெயராமன் பேசும்போது ஞாபகம் வருதே , ஞாபகம் வருதே பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த பாடலை பாட வேண்டும் என்று ஆசை வருகிறது.

அரசியலுக்கு வருவேன், கட்சித் தலைவராக வருவேன் , மாநில முதல்வராக வருவேன் என நினைத்து பார்த்ததில்லை. ஆனால் அவை அனைத்தும் நடந்துள்ளது.
அதற்கு இந்த பள்ளியும் ஒரு காரணம். முதலமைச்சரை உருவாக்கிய பெருமை இந்த பள்ளிக்கு கிடைத்துள்ளது.
என் அண்ணன் அழகிரி , முத்து உள்ளிட்டோர் இங்குதான் படித்தனர். மாமா முரசொலி மாறன்தான் எங்களது படிப்பை கவனித்து கொண்டார்.
ஸ்டாலின் என்ற எனது பெயரை மாற்றினால்தான் பள்ளிகளில் சேர்த்து கொள்வோம் என்று பல பள்ளிகளில் சொல்லி விட்டனர் .
பிறகு என் அண்ணன்கள் இந்த பள்ளியில் படித்ததால் எனக்கும் இந்த பள்ளியில் எளிதாக சீட் கிடைத்துவிடும் என்று நினைத்து இங்கு வந்தேன்.
ஆனால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் இந்த பள்ளியில் சீட் கிடைக்கும், ஆனால் நான் ஃபெயில் ஆனதால் எனக்கு இந்த பள்ளியில் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை .
பின்னர் சென்னை மேயராக இருந்த குசேலருடன் , முரசொலி மாறனும் நானும் காரில் வந்து பேசி இந்த பள்ளியில் சேர்ந்தேன்.
பள்ளியில் அடி வாங்கியது , பென்சில் வாங்கியது , விளையாடியது குறித்து பலமுறை இங்கு வந்தபோது நினைவில் வந்துள்ளது.
இந்த பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்காக எம்ஜிஆர், சிவாஜி, எஸ்எஸ்ஆர் போன்றோரிடம் பலமுறை நன்கொடை வசூல் செய்து வந்துள்ளேன். விடுமுறை கிடைக்கும் என்பதால் அவ்வாறு வெளியில் சென்று நன்கொடை பெறுவேன்.
இந்த பள்ளியில் படித்தவர்கள் இந்த பள்ளிக்கு பல உதவிகளை செய்துள்ளனர். அதேபோல அனைத்து பள்ளிகளிலும் முன்னாள் மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிக்கு உதவி செய்ய வேண்டும்.
இதற்காக வரும் 19 ஆம் தேதி ஒரு திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறேன். பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் மூலம் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமைய உள்ளது
பள்ளிகளை மேம்படுத்துவது அரசின் கடமை என்று நினைக்க வேண்டாம். அனைத்தையும் அரசு செய்ய முடியாது.
ஆகவே, மக்களும் தங்களால் முடிந்தவற்றை பள்ளிக்கு செய்ய வேண்டும். இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக இருக்கிறது. எத்தனையோ நிகழ்ச்சிக்கு சென்றாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது என் மனதில் பசுமையாக இருக்கிறது”. என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கலை.ரா
இரண்டு நாட்களில் அமைச்சரவை கூட்டம்!
வங்கதேச டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்தியா