ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஏன் என்று ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமையில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு தடைவிதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் அது காலாவதியானது.
இந்தநிலையில் இன்று(நவம்பர் 28)புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்திருக்கிறார்.
அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றி கொடுத்து நேற்றுடன் அதற்கான காலக்கெடு முடிந்து விட்டது.
அவசர கால சட்டத்திற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் தந்தார். அதிலுள்ள அதே சரத்துக்கள் தான் சட்ட முன்வடிவில் கொடுத்துள்ளோம்.
சில சந்தேகங்கள் கேட்டவுடன் 24 மணி நேரத்திற்குள் அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது.
நேற்று மாலைக்குள் அதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம் கிடைக்கவில்லை.
தமிழக அரசு எல்லாவிதமான முறையான பதில்களையும் ஆளுநரிடம் அளித்துள்ளது. இதில் காலதாமதப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.
ஏன் ஆளுநர் காலதாமதப்படுத்தகிறார் என்பது தெரியவில்லை அதற்கான காரணம் அவர்களுக்கு தான் தெரியும் என்றார்.
மேலும் தற்போது அமலில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் புதிய சட்டத்தின்படிதான் நடவடிக்கை எடுக்க முடியாது.
ஆளுநர் கையெழுத்திட்ட பிறகு புதிய சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு முழு விளக்கம் அளித்தபிறகும் ஆளுநரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இல்லை. ஆளுநர் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்.
தெளிவான பதில்களை தந்திருக்கிறோம். 95 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.
உலக சுகாதார நிறுவனம் ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவை ஒருவித நோய் என்று அறிவித்துள்ளது.
இந்த நோயை ஒழிக்க வேண்டியது நமது தலையாய பணி. இந்த பணியைத்தான் தமிழக அரசு செய்துள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
கலை.ரா
உதயநிதி அமைச்சரானால் என்னவாகும்: சீமான் கிண்டல்!
மஞ்சிமா மோகனை கரம்பிடித்தார் கௌதம் கார்த்திக்