கட்சியில் தனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை, அந்தஸ்தும் இல்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியிருக்கிறார்.
இன்று (அக்டோபர் 6) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார் நிதியமைச்சர் பிடிஆர்.
அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் கொடுக்கும் போது அவற்றை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பது குறித்த விவரங்களை கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
”அரசாங்கத்துக்கு வெளியே இருக்கும் கருத்துகளுக்கு நான் பதில் சொல்வதில்லை. கட்சியைப் பொறுத்தவரை நான் அடிமட்டத் தொண்டன் தான்.
எனக்கு எந்த பொறுப்பும் இல்லை. கட்சி குறித்து பேசும் அளவுக்கு எனக்கு அந்தஸ்தும் இல்லை.
அரசாங்கம் சார்பில் நிதியமைச்சர் என்ற சார்பில் சில கருத்துகளைக் கூறி வருகிறேன். தேர்தல் ஆணையத்தின் கேள்விக்கு கழகம் பதில் சொல்லும்” என்றார்.
மேலும் ஒன்றிய அரசு பணத்தை வைத்து அரசியல் செய்வது மிக மிகத் தெளிவாக இருக்கிறது. உதாரணத்துக்கு ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் திட்டம் ஒரு மாநிலத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ளது.
இங்கு செங்கல் கூட நடப்படவில்லை. பிரதம மந்திரி திட்டம் என்று அறிவித்துவிட்டு அதற்கான செலவு முழுவதையும் மாநில அரசின் தலையில் சுமத்திவிடுகிறார்கள்.
ஆரம்பத்தில் அறிவிக்கும் நிதியை கொஞ்சம் கொஞ்சமாக சுருக்கி மொத்தத்தையும் மாநில அரசே செலுத்தும்படி செய்துவிடுகிறார்கள்.
மொத்தத்தில் மாநில அரசின் நிதியில் ஒன்றிய அரசு விளம்பரம் தேடிக் கொள்கிறது.
ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் குதிரை பந்தயத்துக்கான வரி விதிப்பு தொடர்பாக வரி வகுக்கவும், ஜி.எஸ்.டி பிரச்சினை குறித்து விசாரிக்க தீர்ப்பாயம் அமைக்கவும் குழு அமைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
ஜி.எஸ்.டி பிரச்சினை குறித்து முறையிட ஒவ்வொரு மாநிலத்திலும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தேவை என்றும் கோரிக்கை வைத்தேன். அப்போதுதான் மக்கள் அதை அணுகுவதற்கு எளிதாக இருக்கும்.
அதற்கான திட்டத்தை இரண்டுமுறை வகுத்து எழுதி கொடுத்தேன். ஆனால் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.
எனவே தான் மதுரையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தமிழகத்தில் இன்னும் கூட்டப்படவில்லை” என்றார்.
நிதியமைச்சராக பல கருத்துகளை சொல்லும் அமைச்சர் பிடிஆர் கட்சி ரீதியாக தனக்கு எந்த அந்தஸ்தும் இல்லை என்று வெளிப்படையாக சொல்லியிருப்பதன் மூலம் மறைமுகமாக தனது வருத்தத்தை வெளிப்படுத்துகிறாரோ என்ற பேச்சு மதுரை திமுக வட்டாரத்தில் உலவுகிறது.
கலை.ரா
அடிதடிக்காகவே ஒரு திருவிழா: சிறுவன் பரிதாப மரணம்!
அமெரிக்காவில் இந்திய குடும்பம் கொலை: சிக்கிய வீடியோ ஆதாரம்!