சசிகலாவுக்கு எப்போதோ எக்ஸிட் கொடுத்துவிட்டோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் ஜெயக்குமார் இன்று (ஜூன் 17) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர்,
’டெபாசிட்டை இழந்துவிடுவோம் என்ற ஒரே காரணத்திற்காக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறாரே?’ என்ற கேள்விக்கு,
“திமுகவுக்கு இப்படி பேச எந்தவொரு முகாந்திரமும், அருகதையும் இல்லை. ஆர்.கே.நகரில் திமுகவுக்கு டெபாசிட் போச்சு. 91-ல் இரண்டே சீட்டில் தான் வந்தார்கள்.
திமுக இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு, ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அத்தனை பேருமே விக்கிரவாண்டியில் கேம்ப் போடுவார்கள்.
பணபலம், ஆள்பலம், அதிகார துஷ்பிரயோகத்தைப் பிரயோகப்படுத்துவார்கள்.
நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டால் போட்டியிடுவோம். இந்த தேர்தலில் போட்டியிடுவது அதிமுகவுக்கு சக்தி, காலம், பணம் அனைத்தும் வீண்.
ஈரோடு இடைத்தேர்தலின் போது ஆடு மாடுகளை போல மக்களை அடைத்து வைத்திருந்தனர். 1996-ல் நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் 150 வார்டுகளில், 86 வார்டுகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அந்தளவுக்கு திமுக அராஜகத்தை நடத்தியது” என்றார்.
சசிகலா மீண்டும் அரசியலில் எண்ட்ரி கொடுப்பதாக கூறியிருக்கிறாரே…
“சசிகலாவையும், அவர் சார்ந்த குடும்பத்தினரையும் போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். பிறகு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் சேர்த்துக்கொண்டார். சசிகலா அதிமுகவிலும் கிடையாது, அதிமுகவுடன் எந்த சம்பந்தமும் கிடையாது. அவருக்கு எக்ஸிட் கொடுக்கப்பட்டுவிட்டது. பிறகு எப்படி ரீ எண்ட்ரியாக முடியும்.
தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவரை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.
அதிமுக ஒரு சமத்துவ கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால் ஒரு மலிவான அரசியலை கையில் எடுத்திருக்கிறார் சசிகலா.
ஓபிஎஸை பொறுத்தவரை அவர் மீது தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். கட்சியில் பலவகையில் குழப்பத்தை ஏற்படுத்தினார். அரசியலில் அவர் ஒரு குறுநாவல்” என கூறினார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பீச் வாலிபால் ஆடிய இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் – வீடியோ வைரல்!
“ஃபேமிலி மேன் ஆகப்போறேன்” – பிக் பாஸ் பிரதீப்புக்கு டும் டும் டும்!