பிரபலமான மனிதனுக்கு மகன் அல்லது மகளாக இருப்பதில் பெருமை இல்லை, மக்களுக்கு சேவை செய்வதே பெருமை என்று சேகுவாரா மகள் அலெய்டா கூறியுள்ளார்.
கியூபா புரட்சியாளர் சேகுவாராவின் மகள் அலெய்டா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று(ஜனவரி 17)சென்னை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் முன்னிலையில் அலெய்டா சேகுவாரா கலந்துரையாடினார்.
இதில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் நல்லகண்ணு, நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் அலெய்டா சேகுவாராவிற்கு சால்வை அணிவித்து நினைவு கேடயத்தை வழங்கினார். அதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் சேகுவாரா மகளுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து,சால்வை, புத்தகங்கள் உள்ளிட்ட நினைவுப் பரிசுகளை வழங்கி வரவேற்றனர்.
அலெய்டா சேகுவாரா ஸ்பானிஷ் மொழியில் பேச, அது மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அவர்,”சில விஷயங்களுக்கு நன்றி சொல்ல முடியாது. சில விஷயங்களுக்கு வார்த்தை இல்லை. மிகப்பெரிய அன்பை நான் பார்த்ததில்லை.
எங்கள் நாட்டு மக்களின் மகளாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். அங்கோலியாவில் குழந்தை மருத்துவராக இருந்த காலத்தில் நல்ல மனிதராக இருந்தேன்.
அங்கோலியா மக்களுக்கு என் கையில் சிகிச்சை பார்த்தது பெருமையாக இருந்தது. ஒரு சிறந்த மனிதனின் மகளாக இருப்பது பெருமை இல்லை. இது போன்ற சேவைகளை செய்ததே எனக்கு பெருமை.

உங்கள் அன்பினை என் நாட்டு மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் எடுத்து சொல்வேன். இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் நல்லகண்ணு தற்போது என்னுடன் இருப்பது பெருமையாக இருக்கிறது.
சாதாரண மக்களுக்கு உழைக்கக்கூடிய சேவை செய்யக்கூடிய நல்ல மனிதர். மிகச் சிறந்த நாளாக இதை கருதுகிறேன். இன்று என் தந்தை மீது காட்டப்பட்ட அன்பை நான் உணர்கிறேன்.
சேகுவாரா மகள் என்ற முறையில் உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் இதுபோன்ற மக்கள் சக்தியோடு இணைந்து தொடர்ந்து வெற்றி பெறும் வரை போராடி கொண்டே இருக்க வேண்டும்” என்றார் .
கலை.ரா
இடைத்தேர்தலால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம்?
சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!