திமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று அக்டோபர் 9ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிலையில்… அந்த கூட்டத்தில் எவ்வித தீர்மானங்களும் நிறைவேற்றப்படாதது கண்டு தொண்டர்கள் குழப்பத்திலும் ஆச்சரியத்திலும் இருக்கிறார்கள்.
திமுக கிராம அளவில் இருந்து மாநில அளவில் எந்த கூட்டம் போட்டாலும் அந்தக் கூட்டத்தின் அஜெண்டா மற்றும் நோக்கம் ஆகியவை பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். திமுக கூட்டம் என்றாலே தீர்மானம் தான் என்ற கருத்து நீண்ட ஆண்டுகளாகவே அரசியல் வட்டாரத்தில் நிலைபெற்ற ஒன்று.
ஆனால் இன்று சுமார் 6000 பேர் கலந்து கொண்ட பொதுக்குழு கூட்டத்தில் எவ்வித தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
நம்மிடம் பேசிய சில திமுக நிர்வாகிகள், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்குகிற நிலையில், தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை பரபரப்பாக இருக்கின்ற நிலையில் இந்த பொதுக்குழுவில் நிறைய தீர்மானங்களை எதிர்பார்த்தோம்.
தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திமுகவின் அரசியல் கோட்பாடுகள் பற்றிய வலிமையான தீர்மானங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பொதுக்குழுவுக்கே உரிய எவ்விதத் தீர்மானமும் இல்லை.

தமிழக அரசின் சர்வதேச சாதனைகளில் ஒன்றான செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ஏற்பாடு செய்த முதல்வருக்கு பாராட்டுத் தீர்மானம், வருகை தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்,
தமிழ்நாடு அரசின் சட்டமன்றத் தீர்மானங்களை கிடப்பில் போட்டிருக்கும் ஆளுநரை கண்டித்து தீர்மானம், திமுக கூட்டணி கொள்கை உறுதியோடு தொடர்கிறது என்ற தீர்மானம், தேசிய அரசியலில் அடுத்தடுத்த சூழ்நிலைகளை கையாள்வதற்கான தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்படும் என நேற்று இரவு வரை பேச்சு இருந்தது.
ஆனால் இந்த பிரம்மாண்ட பொதுக்குழு தீர்மானங்கள் இல்லாத பொதுக்குழுவாக முடிந்து விட்டது. இது ஏனோ ஒரு குறையாகவே இருக்கிறது” என்கிறார்கள்.
திமுக பொதுக்குழுவிலே தீர்மானங்களே இல்லாதது ஏன் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை தொடர்புகொண்டு கேட்டோம்.
“இந்த பொதுக்குழு உட்கட்சித் தேர்தல் தொடர்பான பொதுக்குழு என்பதால் வேறு தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை” என்று பதிலளித்தார்.
–ஆரா
பத்திரிகையாளர் டு துணைப் பொதுச் செயலாளர்: கனிமொழியின் கரடு முரடு பயணம்!
டெல்லி சிக்னலை உணர்ந்த மைத்ரேயன்: நீக்கிய எடப்பாடி