பைக் டாக்சிக்கு அனுமதியா? அமைச்சர் சிவசங்கர் பதில்!

அரசியல்

தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

போக்குவரத்துத் துறையில் பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு நல திட்டங்களை வழங்கும் நிகழ்வு கோவையில் இன்று(ஜூன் 9) நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தப்பட்டு கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது பலரும் அரசு பள்ளிகளில் சேர்ந்து வருவதால் அதிகமானோர் பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது அதனையும், போக்குவரத்து ஊழியர்கள் சரி செய்து போக்க வேண்டும்.

அதே சமயம் புதிய பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர்களும் போடப்பட்டு வருகிறது. புதிய பேருந்துகள் வரும் பொழுது கூடுதலாக ஊழியர்களை நியமிக்கும் நடவடிக்கையும் துவங்கப்பட்டுள்ளது.

அதுவரை பள்ளி கல்லூரி காலத்தில் நல்ல முறையில் பேருந்துகளை இயக்க கூடிய கட்டாயத்தில் இருப்பதால் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ”இன்று கோவையில் 518 பேருக்கு 145.58 கோடி பணபலன்கள் வழங்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் மண்டலங்களில் நடத்துனர், ஓட்டுனர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறைகள் துவக்கி வைத்துள்ளோம். முதல்கட்டமாக சில பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகாலத்தில் ஒரு ஓட்டுநர் நடத்துனர் கூட பணிக்கு அமர்த்தப்படவில்லை. பிறகு கொரோனா காரணமாக புதிய நடத்துனர் மற்றும் ஓட்டுநரை பணிக்கு எடுக்க இயலாத சூழல் இருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை பணிக்கு எடுப்பதற்கான ஆணைகளை வழங்கி உள்ளார்.

அதன்படி முதல் கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பணியில் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மற்ற அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் ஓட்டுனர் நடத்துனரை எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு பேருந்துகளை பராமரிப்பதற்கு வழக்கமாக ஒதுக்கப்படுகின்ற நிதி ஒதுக்கப்பட்டு தான் வருகிறது, எந்த ஒரு குறையும் இல்லை. கூடுதலாக நிதி ஒதுக்க தேவை இருக்கும் பட்சத்தில் முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது செயல்படுத்தப்படும்.

2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு மாநில அரசின் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான டெண்டர்களும் துவங்கப்பட்டுள்ளது. வங்கி நிதி உதவியுடன் 2400 பேருந்துகள் வாங்குவதற்கு பணிகள் துவங்கியுள்ளது.

நான்கில் இருந்து ஆறு மாதத்திற்குள் புதிய பேருந்துகள் நடைமுறைக்கு விடப்படும்.

பைக் என்பது தனி நபர் பயன்படுத்தக்கூடிய வாகனம், அது இன்னும் வாடகைக்கு விடப்படக்கூடிய வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே தமிழ்நாடு அரசை பொருத்தவரை அதனை பயன்படுத்தக் கூடாது. தமிழகத்தில் பைக்டாக்சிக்கு அனுமதி கிடையாது.

காவல்துறையும் பல்வேறு இடங்களில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகரில் ஆன்லைனில் டிக்கெட் பெறுவதற்கான கருவிகளுக்கு டெண்டர் விடப்பட்டு இறுதிக்கட்டத்தில் உள்ளது கூடிய விரைவில் அது நடைமுறைக்கு வந்த பின்னர் பரிசோதித்து மற்ற இடங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“திருமாவின் வாழ்த்து ஊக்கத்தையும் எழுச்சியையும் தருகிறது” – வைகோ

WTC Final: அரைசதம் விளாசிய ரஹானே

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *