அமமுக தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர், தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதிவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 6) அமமுக பொதுக்குழு கூடியது.
அமமுக துணைத் தலைவர் அன்பழகன் தலைமையிலும் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையிலும் நடைபெற்ற பொதுக்குழுவில் பொதுச்செயலாளர், தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் பிரிவு செயலாளர்கள் குமரேசன், பார்த்திபன் இருவரும் முடிவை அறிவித்தனர்.
“அமமுக சட்ட விதி எண்கள் 24(பிரிவு 2), 25(பிரிவு 1), 26 (பிரிவு 1)ல் குறிப்பிட்டுள்ள படி பொதுச்செயலாளர், தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்று கூடித் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாகப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன், தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.கோபால், துணைத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.அன்பழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் பதவிக்காலம் 4 ஆண்டுகள் தொடரும்” என்று தெரிவித்தனர்.
அமமுக தோற்றுவித்த பிறகு, முதல் தலைவராக முன்னாள் எம்.பி. கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவி சசிகலாவுக்காக காலியாக வைக்கப்பட்டிருப்பதாக முன்னதாக அமமுக தரப்பில் கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், டிடிவி தினகரனும் இணைந்த நிலையில் தலைவர் பதவி ஓபிஎஸுக்கு கொடுக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது.
ஆனால் இருவரும் இல்லாமல் புதிதாக ஒருவர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 1998ஆம் ஆண்டு அதிமுக சார்பில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு சி.கோபால் எம்.பி.ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
“தமிழகத்தின் கலாச்சாரம் மாணவர்களை சிறந்தவர்களாக்கும்” – திரவுபதி முர்மு