கொரோனா காலத்துக்கு முன் இந்தியாவில் கடுமையான வீரியமான போராட்டங்களை ஏற்படுத்திய குடியுரிமை சட்டம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (நவம்பர் 24) முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் ’டைம்ஸ் நம் சம்மிட்’ நிகழ்வில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நெறியாளர், “குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றுவதற்கான அஜெண்டாவை முடிக்காமல் அதை அப்படியே போட்டுவிட்டதாக ஒரு பேச்சு எழுகிறதே…?” என்று கேட்டார்.
அதற்கு அமித் ஷா, “ “சிஏஏ, என்ஆர்சி சட்டங்கள் கைவிடப்படவில்லை. சிஏஏ என்பது இந்த தேசத்துக்கான சட்டம், அதை இப்போது மாற்ற முடியாது, அந்த சட்டத்துக்கான விதிகளை உருவாக்க வேண்டும்.
கோவிட் காரணமாக இவை தாமதமாகின, ஆனால் அதற்கான வேலை விரைவில் தொடங்கும். சிஏஏ அமல்படுத்தப்படாது என்று யாரும் கனவில் கூட நினைக்க வேண்டாம். கண்டிப்பாக அதற்கான விதிகள் ஃப்ரேம் செய்யப்பட்டு அமல்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய குடியுரிமை சட்டத்தில் (CAA) முக்கியமான திருத்தம் 2019 டிசம்பர் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் 2020 ஜனவரி 10 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே நாடு முழுதும் சிஏஏ சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தன.
2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன், மத ரீதியாக சித்திரவதைகளுக்கு அநீதிக்கு ஆளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் வாழும் மதச் சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்டத் திருத்தம் வழி செய்கிறது.
அதன்படி மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.

இதில் இஸ்லாமியர்களுக்கு இந்த உரிமை இல்லாததால் மத ரீதியாக இந்த சட்டம் பாகுபாடு காட்டுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதற்கு அரசுத் தரப்பில் மேற்கண்ட நாடுகளில் இஸ்லாமியர்கள் மத ரீதியான சித்திரவதைகளுக்கு ஆளாகவேண்டிய அவசியமே இல்லை என்பதால் இதில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்று பதிலளித்தது.
இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள ஷாஹின் பாக் பகுதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் மையமாக இருந்தது.
அதேநேரம் டெல்லியில் கலவரமும் ஏற்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வீரியமாக நடந்தன.
சென்னையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் சிஏஏ சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. கொரோனா பரவல் அதிகமானதால் 2020 மார்ச் முதல் நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இந்த போராட்டங்கள் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்தன.
கொரோனா கால பிரச்சினைகளால் மத்திய அரசும் இந்த சிஏஏ சட்டத்தின் மீது கவனம் செலுத்தவில்லை.
இந்த நிலையில்தான் இன்று (நவம்பர் 24) ‘சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று யாரும் கனவு காண வேண்டாம்’ என்று கூறியுள்ளார் அமித் ஷா.
–வேந்தன்
வெள்ளி விருப்ப ஓய்வு, சனி தேர்தல் ஆணையரா?: சாட்டை வீசிய உச்ச நீதிமன்றம்