அதிமுக அலுவலகத்துக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் சார்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11 ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என்று தீர்ப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது, அந்த மனுவை நீதிபதிகள், துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு விசாரித்தது. அப்போது அவர்கள் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவித்தனர்.
அதன்படி, சட்டப்படி தான் பொதுக்குழு நடத்தப்பட்டது என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பளித்தனர்.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கடந்த திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று (செப்டம்பர் 8) செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது யாரையும் அதிமுக அலுவலகத்துக்கு உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பன்னீரின் ஆதரவாளரான புகழேந்தி இந்த மனுவை அளித்திருக்கிறார்.
கலை.ரா
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை நாங்கள் வெளியிடட்டுமா?: ஆர்.எஸ்.பாரதி