யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது – திண்டுக்கல் சீனிவாசன்

அரசியல்

“சென்னை ராயப்பேட்டையில் நடந்த கலவரத்தில் யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது” என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இன்று (ஜூலை 15) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “எல்லோரும் தெளிவாக இருக்கிறோம். என்ன நடந்தாலும் எங்கள் கடமை அதிமுகவை காப்பதுதான். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பொதுக்குழு நடத்தக்கூடாது என நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். ஆனால், தோல்வியைத் தழுவினர். இப்படி, அவர்கள் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் அவர்களுக்குத் தோல்வியே. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு வெற்றிபெற்றது. அதுபோல்தான் ஓ.பன்னீர்செல்வம் வங்கிக்கு எழுதியிருக்கும் கடிதமும்.

எல்லாவற்றிலும் எங்களுக்கு வெற்றியே. கொஞ்சம் பொறுத்திருங்கள். இதிலும் நாங்கள் வெற்றிபெறுவோம். ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும். மற்ற சிறுசிறு கட்சிகள்கூட எங்களை நீக்கியிருப்பதாக அறிவிப்பு வெளியிடுகின்றனர். ஏன், தீபாகூட எங்களை நீக்கியிருப்பதாகச் சொல்கிறார். யார் யாரை நீக்கியிருக்கிறார்கள், யாரிடம் கட்சி இருக்கிறது என பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கே தெரியும். ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 2500 தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதில் 5 மாவட்டச் செயலாளர்களைத் தவிர மற்ற எல்லோரும் இங்கு இருக்கிறார்கள். 63 எம்.எல்.ஏக்களில் 3 பேரைத் தவிர மற்றவர்கள் இங்கிருக்கிறார்கள். 234 தொகுதிகளில் இருக்கும் அனைத்துத் தொண்டர்களும் இங்கு இருக்கிறார்கள். இதற்கான சாட்சியங்கள், ஆவணங்களைக் கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்திருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சும்மா ஆட்டம் போடுகிறார்கள். தர்மத்தின் விதிப்படி அனைத்தும் நன்றாக நடந்தது. இனியும் தர்மம் வெல்லும்.
இன்று இடைக்கால பொதுச் செயலாளராய் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, சட்டப்படி தேர்தல் நடந்தபிற்கு, நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார். சென்னை ராயப்பேட்டையில் நடந்த கலவரத்தில் யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. இன்று எல்லாவற்றுக்கும் வீடியோ ஆதாரம் வந்துவிட்டது. நிரபராதிகள் யார் என்பது மக்களுக்கே தெரியும். என்றாலும், சட்டம் அதன் வேலையைச் செய்யும்” என்றார் திண்டுக்கல் சீனிவாசன்.

  • ஜெ.பிரகாஷ்
+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.