திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவுகள் இருக்கக் கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று (ஆகஸ்ட் 10) திருவண்ணாமலை சென்றுள்ளார். அங்கு சாதுக்கள் மற்றும் ஆன்மிக குருக்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
அப்போது, “சிவபெருமானின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடந்ததில்லை. நடக்காது. இங்கு உள்ள மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இன்று நானும் இந்த புனித தலத்தில் உள்ளதால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணருகிறேன். காரணம் இது சிவனின் இடம்.
இந்த புனித தலத்திற்கு நான் வருவது இதுதான் முதல் முறை. சிவபெருமானின் அழைப்பு தான் என்னை இங்கு அழைத்து வந்துள்ளது. இல்லையென்றால், நான் எப்படி இங்கு வர முடியும்.
நான் இங்கு வருவதாக முடிவான உடன் திருவண்ணாமலையில் உள்ள சாதுக்கள் மற்றும் சன்னியாசிகளை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். சாதுக்கள், ரிஷிகளின் தவத்தால் தான் இந்த பாரத நாடு உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை போல நமது பாரதம் இல்லை.
மற்ற நாடுகள் எல்லாம் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை. ஆனால் நமது நாடு ஆதிக்கத்தால் உருவாக்கப்பட்டவை அல்ல. சாதுக்களாலும் ரிஷிகளாலும் உருவாக்கப்பட்டவை.
நமது நாடு பல அரசாட்சிகளால் பிளவுபட்டிருந்தாலும் நாம் ஒன்றாக இருக்கிறோம். நமது நாடு பாரம்பரிய இலக்கியத்துடன் தொடர்புடையது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரிஷிகள், இந்த பிரபஞ்சம் சிவனால் உருவாக்கப்பட்டது என்பதையும் நாம் அனைவரும் சிவனின் பிள்ளைகள் என்பதால், அனைவரும் ஒரே குடும்பம் என்பதை உணர்த்தியவர்கள்.
சிவபெருமானின் பிரதிபலிப்பு இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ளது. இதுவே சனாதன தர்மத்தின் மையம் ஆகும். இந்த உணர்வு தான் கன்னியாகுமரி கடலில் இருந்து இமாலயம் வரை பரவி உள்ளது.
சனாதன தர்மம் தனி ஒருவருக்கானது அல்ல. இது நமது பாரத குடும்பத்திற்கானது. நான், எனது என்ற குறுகிய மனப்பான்மை இல்லாமல் நாம், நமது என்ற பரந்த மனப்பான்மை உடையது சனாதன தர்மம்.
நான் தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு சென்று மக்களை சந்திக்கும் போது ஒன்று புரிகிறது. இந்தியாவின் ஆன்மிக தலைநகரம் தமிழ்நாடு தான். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொல்கிறார்கள். இது தான் சனாதன தர்மம்.
நமது அடிப்படை தத்துவம், யாதும் ஊரே யாவரும் கேளீர். இது மட்டுமே உலகத்தை காப்பாற்ற கூடியது. இதனை சாதுக்களும் ரிஷிகளும் தான் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.
அசைவ உணவுகள் விற்பனை செய்வதற்கான இடம் கிரிவலப் பாதை கிடையாது. காரணம் இந்த ஒரு உயிரையும், குறிப்பாக ஒரு தாவரத்தைக் கூட துன்புறுத்தக் கூடாது என்ற எண்ணம் கொண்ட பக்தர்கள் தான் கிரிவலப் பாதையில் செல்கின்றனர்.
அசைவம் உண்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் அதனை உண்ணலாம். ஆனால் சிவபெருமானின் கிரிவலப் பாதையில் அசைவ உணவுகள் விற்பனை செய்ய அனுமதி கிடையாது.
கிரிவலப் பாதையில் தேவையான அளவு கழிப்பறை வசதிகள் இருக்க வேண்டும் என்பது தான் அடிப்படையானவை. என்னால் முடிந்த வரை இதனை நிறைவேற்றித் தருவேன்” என்று பேசினார் ஆளுநர்.
தொடர்ந்து சாதுக்கள் மற்றும் ஆன்மிக குருக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உணவு பரிமாறினார்.
மோனிஷா
”அமித் ஷா பேசியது பொய்”: அம்பலப்படுத்திய கலாவதி
பொன்முடி வழக்கில் மிக மோசமான விசாரணை: உயர்நீதிமன்றம் புது உத்தரவு!