ஒரு ஆளுநர் மசோதா வந்த உடனேயே கையெழுத்துப் போட வேண்டும் என்பது கிடையாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று (டிசம்பர் 4) பேட்டி கொடுத்தார்.
அப்போது பேசிய அவர் “ஜி 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது பெருமைக்குரிய நிகழ்வு. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் நாளை டெல்லியில் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுடன் காணொலி வாயிலாகப் பிரதமர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது”. என்றார்.
தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருவதால் அவரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “அரசியல் ரீதியாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்று ஆளுநர் சில தகவல்களைச் சொல்லி இருக்கிறார். ஆளுநர் என்றாலே எந்தவித சந்தேகமும் படாமல் உடனே கையெழுத்துப் போட வேண்டும் என்று இல்லை.
அவர்கள் அமைச்சரை அழைத்து சில விளக்கங்களைக் கேட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். விளக்கம் கிடைத்ததும் அவர் அதற்கான முடிவு எடுக்கலாம்.
ஒரு ஆளுநர் மசோதா வந்த உடனேயே கையெழுத்துப் போட்டுத் தான் ஆக வேண்டும் என்று கிடையாது. அதில் சில சந்தேகங்கள் இருந்தால், அவர்கள் அதற்கான ஆலோசனை கேட்பதற்கு நேரம் எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.
மோனிஷா
பாலா படத்திலிருந்து விலகிய சூர்யா: ஏன்?
இரட்டை சகோதரிகளுடன் திருமணம்: மாப்பிள்ளை மீது பாய்ந்த வழக்கு!