எனக்கு இருக்கும் புகழே போதும்: மு.க ஸ்டாலின்

Published On:

| By Kalai

அதிமுக ஆட்சிக்காலத்தில் கைவிடப்பட்ட ரூ. 1600 கோடி மதிப்பிலான ஈரோடு கூட்டுக்குடிநீர் திட்டமும், ரூ. 765 கோடி மதிப்பில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டமும் விரைவில் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பெருந்துறையில் ஸ்டாலின்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ரூ. 261.57 கோடி மதிப்பில் முடிவுற்ற 135 திட்டங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும் ரூ. 183.70 கோடி மதிப்பில் 1761 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், பெருந்துறை என்பது பல்வேறு வரலாற்று சிறப்புகளைக் கொண்ட ஊர். கடந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு துறை சார்பிலும் ஏராளமான திட்டப்பணிகள் ஈரோடு மாவட்டத்துக்கு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 1600 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்

ஈரோடு மாநகராட்சியில் 2 பேருந்து நிலையங்கள் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தியூர், பர்கூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு சாலை வசதி செய்யப்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரூ. 1600 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. பெருந்துறை பகுதிக்கு ரூ. 765 கோடி மதிப்பிலான கொடிவேரி திட்டமும் தொடங்க இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரத்துக்குட்பட்ட மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு இணையதள கல்வி மற்றும் மருத்துவ சேவை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குளிர்பதன கிடங்குகள்

மகளிர் சுய உதவிக்குழு மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்ய ‘ஆற்றல் ஈரோடு’ என்ற பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட வேளாண் துறைக்கு ரூ. 16.82 லட்சத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஈரோடு, தாளவாடி, நல்லாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் தலா 2 கோடி ரூபாய் செலவில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.

மஞ்சள் உற்பத்தியாளர் நலனுக்கு ரூ. 10 கோடி செலவில் மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்தப்படும். தாளவாடியில் 24 மணி நேர அவசர சிகிச்சை மையம் நிறுவப்படும். அத்திக்கடவு – அவினாசி திட்டப்பணிகள் ஓரிரு மாதங்களில் முடிந்து விரைவில் துவங்கி வைக்கப்படும்.

புதிய புகழ் தேவையில்லை

புதிய புகழ் தேவையில்லை இருக்கும் புகழே போதுமானது. உன் அப்பாவை போல் இருக்கிறாய் என்று அறிஞர் அண்ணா சொன்னதே போதுமானது. என் உயிர் இருக்கும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன்.

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்பதே என் இலக்கு. 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நெல் உற்பத்தியில் தமிழகம் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. மக்களை காக்கும் அரசாக மட்டுமில்லாமல் மண்ணை காக்கும் அரசாகவும் திகழ்கிறது.

நெல் உற்பத்தியில் சாதனை

18 லட்சம் மெட்ரிக் டன் நெல் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் முடிவை நீதிமன்றமே ஏற்றுக் கொண்டு சமூக நீதியை நிலைநாட்டியிருக்கிறது.

வேளாண் உற்பத்தியாகட்டும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதாகட்டும் அனைத்திலும் தொலைநோக்கோடு முடிவு செயல்படுவதே வெற்றிக்கு காரணம்.

தமிழகம் தான் முன்னோடி

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல திட்டங்கள் பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன.

பள்ளிக்கல்வியை முடித்து உயர்கல்வியில் பெண்கள் அதிகம் சேரக்கூடிய, தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் அதிகமுள்ள, சமூக பெண் பாதுகாப்பு, பின்தங்கிய வகுப்பினர் முன்னேற்றம், பெண் தொழில் முனைவோர் அதிகமுள்ள மாநிலம் தமிழகம் தான்.

சிசு மரணம், வறுமை, பட்டினி குறைந்த மாநிலம் தமிழகம் தான். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சி. மக்களுக்கு உழைப்பதை வாழ்நாளின் கடமையாக கருதுகிறேன். தமிழ் சமுதாயத்தை வளமும், நலமும் கொண்ட சமூகமாக மாற்றிக் காட்டுவதே என் லட்சியம் என்று ஸ்டாலின் பேசினார்.

கலை.ரா

விமர்சனங்களால் வளர்ந்தவன் நான் : கோவையில் முதலமைச்சர் ஆவேசப் பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel