”கப்பலூர் சுங்கச்சாவடியில் இனி கட்டணம் செலுத்த வேண்டாம்” : அமைச்சர் மூர்த்தி

அரசியல்

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், ஆதார் அட்டையை காண்பித்து கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும் அமைச்சர் மூர்த்தி இன்று (ஜூலை 29) அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி கடந்த 2012ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது முதல் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிப்பதாக பிரச்னை எழுந்து வருகிறது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று வந்தது. எனினும் இந்த விவகாரத்தில்  நிரந்தரத் தீர்வு வரும் வரை உள்ளூர் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை வாகனங்களுக்கு விலக்கு அளிக்கும் நடைமுறையைப் பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

2 முதல் 12 லட்சம் ரூபாய் வரை கட்டணம்!

இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் இருந்து சுங்கச்சாவடியைப் பயன்படுத்தியதற்காக 2 முதல் 12 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும், உள்ளூர் மக்கள் கப்பலூர் சுங்கச்சாவடி வழியே சென்று வர 50% கட்டணத்தைச் செலுத்த வேண்டுமென நிர்வாகம் அறிவித்தது. இது மக்கள் மத்தியில் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

இதனை கண்டித்து கடந்த 10ஆம் தேதி உள்ளூர் மக்கள் ஒரு நாள் முழுவதும் சுங்கச்சாவடியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் தற்காலிக தீர்வாக உள்ளூர் மக்கள் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டையைச் சார்ந்த வாகனங்களுக்கு விலக்கு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்க கோரிய உத்தரவை  எதிர்த்து அப்பகுதி மக்கள் நாளை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

இந்தநிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை, காவல்துறை பங்கேற்ற  முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி  பேட்டியளித்தார்.

அவர், “மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. ஆதார் அட்டையை காண்பித்து கட்டணமின்றி பயணிக்கலாம். இதனை மீறி உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக்கூடாது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழ்நாடு கொலை மாநிலமா? எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்!

லெவல் கிராஸ் : விமர்சனம்!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *