மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை ஹிட்லர் என்று வர்ணித்த அமித் ஷா, நாடாளுமன்ற தேர்தலின் மூலம் டி.எம்.சி ஆட்சி முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சரியாக தேர்தலுக்கு ஒரு வருடம் உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத்தில் இன்று(ஏப்ரல் 14) பாஜகவின் பிரச்சாரத்தை தொடங்கினார்.
2025ஆம் ஆண்டுக்கு மேல் நீடிக்காது
பிர்பூமின் சியூரி நகரில் நடந்த பேரணியில் கலந்துகொண்ட அமித் ஷா, அதன்பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 35 இடங்களில் பாஜக வெற்றி பெறும். அது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
2024 இல் பாஜகவுக்கு 35 இடங்களுக்கு மேல் கொடுத்து மோடியை மீண்டும் பிரதமராக்குங்கள். அப்படி நடந்தால் மம்தா பானர்ஜி அரசு 2025ஆம் ஆண்டுக்கு மேல் நீடிக்காது என்று நான் உறுதியாகச் சொல்கிறேன்.
மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி பாஜக ஆட்சியை அமைப்பதுதான்.” என்றார்.
ராமநவமி பேரணிகள் மீது தாக்குதல்
தொடர்ந்து அவர், “முதல்வர் மம்தா பானர்ஜி ஹிட்லர் போன்ற ஆட்சியை நடத்துகிறார். ராம நவமியை அமைதியாகக் கொண்டாட வங்காள மக்களுக்கு உரிமை இல்லையா? ஹவுரா மற்றும் ஹூக்ளியில் பாஜகவினரின் ராம நவமி பேரணிகள் தாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அயோத்தியில் ஏன் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். காங்கிரஸ், மம்தா மற்றும் அவர்களது கூட்டாளிகள் பல ஆண்டுகளாக அதை முடக்கினர்.
ஆனால் பிரதமர் மோடி அயோத்திக்கு சென்று அடிக்கல் நாட்டினார். இப்போது விமர்சகர்கள் அமைதியாகிவிட்டனர்.” என்று பேசினார்.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பாரா மம்தா?
மேலும் அவர் பேசுகையில், “எல்லையில் இருந்து சட்டவிரோத ஊடுருவலை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும். ஒரு காலத்தில் இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் மையமாக இருந்த வங்காளம் இப்போது பயங்கரவாதத்தின் மையமாக உள்ளது.
வங்காளத்தில் இருந்து 87,000 கிலோ அமோனியம் நைட்ரேட்டை என்ஐஏ (தேசிய புலனாய்வு அமைப்பு) கைப்பற்றியுள்ளது. மாநிலம் வெடிகுண்டு தொழிற்சாலையாக மாறிவிட்டது.
ஹிட்லர் போன்ற ஆட்சியைத் தொடர பாஜக அனுமதிக்காது. வாக்காளர்களாகிய நீங்கள் அதை தடுக்க முடியும். மேற்கு வங்காளத்தின் அடுத்த முதல்வர் பாஜகவைச் சேர்ந்த ஒருவர்தான் என்று உறுதியளிக்கிறேன்.
பாகிஸ்தானுக்கு மம்தா தக்க பதிலடி கொடுக்க முடியுமா? அவரால் காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்க முடியுமா? அதை மோடியால் மட்டுமே செய்ய முடியும்.
மம்தா பானர்ஜியின் ஒரே நோக்கம் தனது மருமகனை அடுத்த முதல்வராக ஆக்குவதுதான். ஆனால் அந்த வம்ச ஆட்சியை மோடியால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்.” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சிறுபான்மையினரின் நலனுக்காக திராவிட மாடல் தொடர்ந்து செயல்படும்: முதல்வர்
விஜய் போட்ட உத்தரவு: அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய நிர்வாகிகள்!