குஜராத் மாநிலம் வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் இனங்கள் பட்டியலில் மோடி என்ற ஒரு இனமே இல்லை என்று மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, “அதெப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற துணைப்பெயர் உள்ளது?” என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த 23ம் தேதி ராகுல்காந்தி குற்றவாளி என்றும், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து ராகுல்காந்தி அவரது எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ராகுல்காந்தி அவமதித்தாக கூறப்படும் மோடி என்ற சமூகமே வழக்கத்தில் இல்லை என்பது தற்போது விவாதமாக எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநில சிறுபான்மையின ஆணைய தலைவரும், மூத்த காங்கிரஸ் கட்சி தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் இன்று (மார்ச் 29) நமது மின்னம்பலம் சேனலுக்கு பேட்டியளித்தார்.
அவர் பேசுகையில், “அவதூறு வழக்கில் ராகுல்காந்தி வழக்கறிஞர் பேசிய தரவுகள் என்னிடம் இல்லை. குஜராத்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதால் தீர்ப்பை முழுமையாக படிக்க முடியவில்லை.
ராகுல்காந்தி மோடி என்ற வார்த்தையை பயன்படுத்தியதை வைத்துக்கொண்டு அவர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக பேசுகிறார் என்று பாஜக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.
ஒவ்வொரு மாநிலமும் பிற்படுத்தப்பட்டோர் இனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
குஜராத் மாநிலம் வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் இனங்கள் பட்டியலில் மோடி என்ற ஒரு இனமே இல்லை. அதுகுறித்து குஜராத்தில் உள்ள நண்பர்களோடு நான் விசாரிக்கையில், ‘நம்மூரில் பாண்டியன், சிங் என்ற துணைப்பெயரை எல்லோரும் வைத்துகொள்வார்கள்.
பாண்டியன் என்ற பெயரை முற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் என எல்லோரும் வைத்திருக்கிறார்கள்.
அதே போல குஜராத்தில் மோடி என்ற பெயரை எல்லோரும் வைத்திருக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் கூட வைத்திருக்கிறார்கள்.
நீரவ் மோடி ஒரு ஜெயின், லலித் மோடி முற்படுத்தப்பட்ட பணியா வகுப்பைச் சேர்ந்தவர். இவர்கள் யாருமே ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கீழ் வருவதில்லை.
அதானி விவகாரத்தை திசைதிருப்பவே, மீண்டும் மீண்டும் ராகுல்காந்தி பேசியதை பூதாகரமாக தங்களது சார்பு ஊடகங்கள் மூலம் பரப்பி பாஜக விவாதத்தை எழுப்பி வருகின்றனர்.
ஆகவே ராகுல்காந்தி எந்த சமூகத்தையும் குறித்து பேசவில்லை என்பதே உண்மை.” என்று தெரிவித்துள்ளார்.
சந்திப்பு : பெலிக்ஸ் இன்ப ஒளி
தொகுப்பு : கிறிஸ்டோபர் ஜெமா
வாலி குறித்து திடீரென உருகிய வைரமுத்து: பின்னணி என்ன?
கர்நாடக தேர்தல்: கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?