வடிவேலுவான அருணா: கலாய்க்கும் அண்ணாமலை

அரசியல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னதை அருணா ஜெகதீசன் ஆணையம் திரித்துக் கூறியிருப்பதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருக்கிறார்.

அண்ணாமலை கருத்து

10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ரோஸ்கர் மேளா திட்டத்தை பிரதமர் மோடி இன்று(அக்டோபர் 22) காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். சென்னையில் ஐ.சி.எப் வளாகத்தில் இருந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

திமுக தமிழை வளர்க்கவில்லை

இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்துப் பேசிய அண்ணாமலை,  தமிழ் மொழியை திமுக அரசு வளர்க்கவில்லை. மாறாக தாய் மொழியை வைத்து திமுக அரசியல் தான் செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி திணிப்பு நடைபெற்றது. மருத்துவம், பொறியியல் என எந்தப் படிப்பையாவது திமுக அரசால் தமிழில் கொடுக்க முடியுமா, தமிழுக்காக திமுக என்னசெய்திருக்கிறது என்று கேட்டால் எதுவுமில்லை என்பது தான் பதிலாக இருக்கும் என்று கூறினார்.

ஆறுமுகசாமி குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. இந்தியாவிலேயே சிறப்பான மருத்துவர்கள் இருக்கும்போது வெளிநாடு செல்லவேண்டிய அவசியமில்லை என்று ராதாகிருஷ்ணன் சொன்னதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.

உண்மையான அறிக்கையில்லை

அதை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை. எய்ம்ஸ் மருத்துவக்குழுவும் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை தான் அளிக்கப்பட்டிருக்கிறது என்று அறிக்கை அளித்திருக்கிறது. அதையும் தவறு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இது உண்மையை வெளிகொண்டு வரும் அறிக்கை அல்ல என்றார்.

தூண்டிவிட்டது யார்?

வடிவேல் சொன்னது போன்று கிணத்தை காணோம் என்ற ரீதியில் தான் அருணா ஜெகதீசன் அறிக்கை உள்ளதாக அண்ணாமலை விமர்சித்தார்.  தூத்துக்குடியில் நடந்த போராட்டத்துக்கு காரணமானவர்கள் யார் என்ற தெளிவான தகவல் இல்லை என்று 5 ஆண்டுகள் கழித்து அந்த ஆணையம் சொல்கிறது. முழுமையான தகவல் இன்றி காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருப்பதை பாஜக ஏற்றுக்கொள்ளாது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தூண்டிவிட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஜினிகாந்த் பேச உரிமையுண்டு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துகளை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஒரு சாதாரண குடிமகன் என்ற அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்துக்கு கருத்து கூறுவதற்கு முழு உரிமையும் இருக்கிறது. தமிழக நடிகர்கள் பலர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது, ரஜினிகாந்த் கருத்து தெரிவிப்பதில் தவறில்லை.

போராட்டக்காரர்கள் சமூக விரோதிகள் தான்

அமைதியான போராட்டத்தில் வேண்டுமென்றே யாராவது கல் எறிந்தாலோ அல்லது பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தாலோ அவர்கள் சமூக விரோதிகள் தான். ஒரு சாதாரண குடிமகன் என்ற அடிப்படையில் போராட்டத்தை உண்டாக்குபவர்களை சமூக விரோதி என்று சொல்வதில் எந்த தவறுமில்லை. அப்படிதான் ரஜினிகாந்தும் சொன்னார். அதற்கு ஆதாரம் கேட்பது எந்த விதத்தில் நியாயமாகும் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி சொன்னது தவறில்லை

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வதாக அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை தெரிவித்தார். போராட்டம் குறித்து அப்போதைய அதிகாரிகள் முதலமைச்சருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்திருக்கலாம். ஆனால் துப்பாக்கிச்சூடு நடந்த சமயம், அதை எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டிருக்கலாம். அதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். அது எப்படி தவறாகும். எடப்பாடி பழனிசாமி கூறியதை ஆணையம் திரித்துக் கூறியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

கலை.ரா

கனடாவில் துப்பாக்கி விற்பனைக்கு தடை!

“100 ஆண்டுகாலப் பிரச்சினை 100 நாளில் போய்விடாது”- பிரதமர் மோடி பேச்சு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *